பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
246 ||

அப்பாத்துரையம் - 6



வழக்கமான தாடியையோ, அவன் வைத்துக்கொள்ளவில்லை. இப்பழக்கங்களால் அவன் எளிய தோற்றம் இன்னும் எளிமையுற்றது எனலாம்.

ஹைதரின் கூரிய சிறிய கண்கள் அவன் நுணுகிய இயற்கை அறிவுத் திறத்துக்குச் சான்று பகர்ந்தன. வளைந்த சிறு மூக்கு இயல்பான அவன் ஆளும் திறத்தையும் கண்டிப்பையும் எடுத்துக் காட்டின. தடித்த அவன் கீழுதடு, அவன் நெஞ்சழுத்தத்துக்கும் உறுதிக்கும் விடாப்பிடிக்கும் சின்னங்களாய் அமைந்தது.

அணிமணிகளையோ பட்டாடை பொன்னாடைகளையோ ஹைதர் மிகுதி விரும்பியதில்லை. ஆயினும் அவன் உடையமைதியில் மிகுதி கருத்துச் செலுத்தியிருந்தான். வெள்ளைச் சட்டையையே அவன் விரும்பி அணிந்தான். பொன்னிறப் பூ வேலை, பொன்சரிகை அருகு ஆகியவற்றில் அவனுக்குப் பற்று மிகுதி. அச்சடிப்புள்ளி அல்லது புள்ளடி இட்ட சீட்டிகளை, சிறப்பாக பர்ஹாம்பூரில் நெய்த நேரியல்களை அவன் ஆர்வத்துடன் மேற்கொண்டான். கால்சட்டைகளும் இதே வகையான, மசூலிப் பட்டணம் துணிகளால் அமைந்திருந்தன. வேண்டும்போது நாடாக்களால் இறுக்கக் கட்டவும், மற்றச் சமயங்களில் நடுவே திறந்துவிடவும் தக்க முறையில் அவை தைக்கப்பட்டன. மடித்துத் தொங்க விடும் தளர் ஆடையையும் அவன் வழங்கினான்.

அவன் விரும்பிய நிறம் சிவப்பு அல்லது நீலச் சிவப்பு. அவன் தலைப்பாகை அந்நிறங்களிலோ, மஞ்சளாகவோ இருந்தது. நூறு முழம் கொண்ட நேரிய துணியால் அது நெடுநீள உருவில் உச்சி தட்டையாய் இருக்கும்படி கட்டப்பட்டது. இவை தவிர, அரையில் ஒரு வெண்பட்டிழைக் கச்சையையும், மஞ்சள் கால்புதையரணமும் அவன் அணிந்துவந்தான். அரசிருக்கையில், அமரும் சமயம் மணிக்கையில் வைர வளையங்களும், விரல்களில் இரண்டு மூன்று வரக் கணையாழிகளும் இருப்பதுண்டு. அவன் அருகே வைரமிழைத்த பிடியுடைய ஒரு வாள் தொங்கிற்று.

பூம்பாயல், மெத்தை படுக்கைகள் ஹைதருக்கு வழக்கமில்லை. பாசறைகளிலும் சரி, அரண்மனையிலும் சரி, பட்டுக் கம்பளம் ஒன்றும் இரண்டு மூன்று தலையணைகளுமே அவனுக்குப் போதியவையாயிருந்தன.