பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 247

படையணியுடன் இருக்கும்போது எல்லாப் படைவீரரும் தலைவரும் அணியும் அதே வகை அங்கியையே, அவன் தான் விரும்பும் வெண்பட்டுத் துணியில், தான் விரும்பும் பூம் புள்ளிகளுடன் தைத்து அணிந்தான்.

உடையின் எளிமையாவது ஹைதருக்கு ஒரு நடுத்தர உயர்குடியினன் தோற்றத்தைத் தந்தது. ஆனால், அவன் உணவுப் பழக்கம் குடிமக்களில் பலருக்குக்கூட வியப்பளிப்பதாயிருந்தது. இன்ன உணவுதான் வேண்டும் என்று அவன் எங்கும் கட்டளையிட்டதில்லை. வைத்த உணவை உண்டான். பலவகை உணவு, பல சுவை உணவு வைத்திருந்த இடங்களில், அவன் கூடியமட்டும் எல்லாவற்றிலும் சிறிது உண்பானேயன்றி, வேண்டியது உண்டு வேண்டாதது விலக்கியதில்லை. ஆயினும், இயற்கை விருப்பு வெறுப்புப் பற்றிய மட்டில், அவன் இனிப்பை அவ்வளவாக விரும்பியதில்லை என்றே கூறவேண்டும். புளிப்பு, கைப்புச் சுவைகளையே மிகுதி விரும்பினான். நிறை உணவு வகையிலே அவன் சோறும் பருப்புமே உண்ணும் விருப்புடைய வனாயிருந்தான்.

பயணங்களிலும் போர் நடவடிக்கை நேரங்களிலும் அவன் சேமம் செய்துகொண்டு வரப்பட்ட அரிசி அல்லது கேப்பை அடையையே உண்டான். அத்தகைய உணவை உண்பதில் பொதுப்படை வீரர்கூடச் சலித்துக் கொள்வதுண்டு. அவன் சலித்துக் கொள்வதில்லை.

அரசிருக்கையில் கொலுவீற்றிருக்கும் பெருமித ஆடம்பரத்தை மன்னரும் மக்களும் விரும்புவதுண்டு. மன்னர் அவற்றில் பெருமை கொள்வதும் உண்டு. ஹைதர் மக்களுக்கான இன்றியமையாத வேளைகளிலன்றி, மற்றச் சமயங்களில் அவற்றை விரும்புவதில்லை. ஆனால், மைசூரில் ஹைதருக்கு முன்னாளிலிருந்து இந்நாள்வரை அரசமரபினர் தசராக் கொண்டாட்டத்தில் மிகவும் ஈடுபட்டு வந்துள்ளார்கள். மக்களுக்கும் அது ஒரு தேசீயப் பெருவிழா ஆக இருந்து வந்துள்ளது. ஹைதர் முஸ்லீமானாலும் பழைய அரச குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், மக்களுக்குரிய சமயப் பற்றுக்கும் எழுச்சிக்கும் ஊக்கமளிப்பதற்காகவும் அத்தருணத்தில் தனிச் சிறப்பான கொலு நடத்துவது வழக்கம்.