பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250 ||

அப்பாத்துரையம் - 6




ஒரு தடவை ஒரு குதிரைச் சேணம் பழுதாய்விட்டது. அது பயன்படாதென்று எறியப்பட்டது. அது குப்பையுடன் குப்பையாய்க் கிடந்தது. குப்பை கூட்டுபவர்கூட அதைக் கவனிக்கவில்லை. அதுபற்றி எவரும் எண்ணவும் இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் சேணங்களை மேற்பார்வையிடும்போது ஹைதர் “பழுதுபட்டு எறியப்பட்ட சேணம் எங்கே? என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். ஹைதர் சேணத்தின் அடையாள விவரங்களை நுணுக்கமாகத் தெரிவித்தான். அந்த அடையாள விவரங்களை மனதிற்கொண்டு தேடியபின், அது குப்பைக் கூளத்தில் புதையுண்டு கிடந்து கண்டெடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குமுன் கண்ட ஆள்களை மட்டுமின்றி அவர்கள் குரலையும், பல செய்திகள் பற்றிய நுட்ப நுணுக்க விவரங்களையும் அவன் கூரிய உள்ளம் விடாது பற்றிக் காக்கும் இயல்புடையதாயிருந்தது.

ஒரே சமயத்தில் பல காரியங்களிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் ஒருங்கே கருத்துச்செலுத்தும் திறமும் ஹைதரிடம் இருந்தது. கடிதங்களை ஒருவர் வாசிப்பதைக் கேட்டுக்கொண்டே கட்டளைகளை எழுதுபவருக்குக் கட்டளை வாசகம் கூறல், வேலை செய்பவர்களை மேற்பார்த்தல், கணக்குப் போட்டுப் பார்த்தல் முதலியவற்றையும் செய்து, எதிலும் வழுவில்லாமல் நிறைவேற்றும் அவன் ஆற்றல் வியப்புக்குரிய தாயிருந்தது. காலை வேளையில் அம்பட்டன் அவனை வழித்துக்கொண்டிருக்கும் போதே, ஒற்றர் கூறிய செய்திகளை அவன் கேட்பான். நினைவுக் குறிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் செய்தியுடன் மற்றவர் செய்தியை ஒப்பிட்டு, அவன் தேவைப்பட்டபோது அவர்களைக் குறுக்குக் கேள்விகள் கேட்பான்.குறிப்புகளுடன் வந்த ஒற்றர்கள் அவன் கேள்விகளுக்கு விடைகூறத் திணறுவார்கள்.

நினைவாற்றலிலும் அரிது அவன் அறிவாற்றல். அவனுடன் பழகியவர்களுக்கு அது ஒரு மாய ஆற்றலாகவே இருந்தது. உண்மையில் அது அவன் ஆழ்ந்த அனுபவம், கூரிய மதிநுட்பம் ஆகியவற்றின் பயனேயாகும். குதிரைகள், மணிக்கற்கள், தோல் வகைகள் ஆகிய எப்பொருளையும் கண்டமாத்திரத்தில் அவனால் மதிப்பிட்டுத் தேர்ந்துவிட முடிந்தது. படை வீரர்,