பிரபுல்ல சந்திரரே (பி.ஸி.ரே). அரசியல் கிளர்ச்சியில் இந்தியாவைத் தட்டியெழுப்பிய பின் சந்திரபோஸ், சித்தரஞ்சனதாஸ் ஆகிய ஈடும் எடுப்பும் அற்ற மாணிக்கங்கள் வங்க மரபில் வந்த வளங்கள் ஆகும். இத்தகைய பல்வகை வண்மைகள் நிறைந்த நாட்டுக்கும் போஸ் ஒரு பெரு விளக்கம் தந்தனர் எனில் அவர் பெருமையை என்னென்று கூறுவது.
தாய் தந்தையர், குடும்பம்
போஸ் மரபுரிமையால் வங்கத்தினராயினும் அவர் பிறந்த நாடு வங்கமன்று; வங்க நாட்டை அடுத்துத் தென்பாலுள்ள கலிங்கநாடு. இது ஒரிசா என்றும் உத்கலம் என்றும் இன்று வழங்குகிறது. இதன் தலைநகரான கட்டாக்கில் போஸ் குடும்பத்தினர் நீண்ட நாளாக வாழ்ந்து வந்தனர். போஸின் தந்தையாரான ஜானகிநாத போஸ் இந்நகரில் அரசாங்க வழக்கறிஞராக (Public Prosecutor) அலுவல் பார்த்து வந்தார். அதனுடன் அவர் அந்த நகரில் நகரவைத் தலைவராகவும் அம்மாவட்டத்தின் தலைவராகவும் அமர்வு பெற்று நாட்டுப் பணியிலும் ஈடுபட்டு வாழ்ந்தார்.
போஸின் அன்னையாரான பிரபாவதி அம்மையார் எளிய பழக்க வழக்கங்களும் ஆழ்ந்த சமயப் பற்றும் உடையவர்.போஸின் நேர்மைக்கும் கொள்கையுறுதிக்கும் அவர் அன்னையாரின் பயிற்சியே பெரிதும் காரணமாயிருந்தது என்று கூறப்படுகிறது.
பிறப்பும் உடன் பிறப்பும்
சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாளில் பிறந்தார். அவருடன் பிறந்த ஆண்கள் அறுவர்; பெண்கள் ஐவர்.பிற்காலத்தில் இவர்கள் அனைவருமே தந்தையைப் போல் நாட்டின் உயர்பணிகளில் ஈடுபட்டுப் பெருமையுற்றனர். அவர்களுள் போஸின் தமையனாரான சரத்சந்திர போஸ் சுபாஷுடன் பல வகைகளில் நெருங்கிய தொடர்புடையவர். இருவரும் தம் வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே நெருங்கிய அன்பும் ஒத்துழைப்பும் உடையவராயிருந்தனர். எனவே போஸின் நாட்டார்வத்திலும் நாட்டுப் பணியிலும் சரத்சந்திரர், போஸின் ஒரு நிழல்போல அவர் இணைபிரியாத் தோழராக விளங்கினார். வாழ்விலும் தாழ்விலும், இளமையிலும் முதுமையிலும் ஒரே