பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லூரியடைந்தபின் அவர் சமயப்பற்றும் நாட்டுப் பற்றும் இரண்டுமே பல தொல்லைகளை வருவிப்பவையாயிருந்தன.

கல்லூரி வாழ்வு

சுபாஷ் 1913-ஆம் ஆண்டு கல்கத்தா சென்று அங்குள்ள மாகாணக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். இங்கே பயிலும் போது அவர் விவேகானந்த அடிகளின் சமயக் கோட்பாடுகளில் பெரிதும் ஈடுபட்டுக்கல்லூரிப் பாடங்களைவிட அவற்றிலேயே கருத்தூன்றினார்;அக்கோட்பாடுகளை வாய்ப்பறை யறைவதற்காக மட்டும் பிறரை போல் அவர் கற்கவில்லை. கற்றபடி அனுபவத்தில் கொண்டுவர எண்ணினார்.ஆகவே புலனடக்கம்,சமாதி முதலியவற்றில் ஆழ்ந்து ஈடுபடலானார். இதன்மூலம் தற்காலிகமாக அவர் கல்லூரி வாழ்வுக்கு இடையூறும் ஏற்பட்டது.

துறவு வாழ்வு

ஆழ்ந்த கடவுட் பற்றுக் காரணமாக போஸ் தம் கல்லூரிப் பயிற்சியின் ரண்டாம் ஆண்டில் திடுமெனத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு எவருக்கும் அறிவிக்காமல் கல்லூரியை விட்டோடிக் காடும் மேடும் நடந்து இமயமலைப் பகுதி சென்றார். பழங்காலப் புத்தர் போல் அவர் ஞானகுருவை நாடிப் பல நாள் மலைகளில் கடுநோன்பிருந்தார். துறவு வாழ்வினால் புதிய அறிவு எதுவும் பெற முடியாது என்று கண்டு அவர் காசி, கயா, பிருந்தாவனம் ஆகிய இடங்களில் சுற்றியலைந் தார். இவற்றாலும் எப்பயனும் காணாமல் உடல் நலத்தையும் சீர்குலைத்துக் கொண்டு அவர் தம் ஊருக்குத் திரும்பி வந்தார்.

போஸ் கல்லூரிப் படிப்பை விட்டேகியது கேட்ட பெற்றோரும் உற்றோரும் பேரதிர்ச்சியடைந்தனர். தம் பிள்ளை கல்லூரிப் படிப்புத் தேறிப் பெரிய பதவி வகிப்பான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அவர் சமயப் போக்கு பேரிடியாயிருந்தது. ஆனால் அவர்கள் கவலையிடையே பால் வார்த்ததுபோல் அவர் திரும்பி வீடு வந்ததும் அவர்கள் எல்லையிலாக் களிப்படைந்தனர். ஆயினும் மென்மையான வாழ்க்கையிலேயே பழகிய அவர் நொய்ய உடல் மிகவும் சீர்குலைவுற்று அவர் கல்லூரிக்கு செல்ல முடியாமல் நெடுநாள் படுக்கையிலிருக்கும்படி நேர்ந்தது.