3. நாடும் நாட்டியக்கமும்
விடுதலை இயக்க வரலாறு : பேரவை
போஸின் வாழ்வு இந்திய விடுதலை இயக்க வரலாற்றின் ஒரு பகுதியேயாகும். போஸின் வாழ்க்கைப் பணியை உணர அவர் இளமை எப்படிப் பின்னணியாய் அமைந்துள்ளதோ, அப்படியோ நாட்டியக்க வரலாற்றின் முற்பகுதியும் அதன் பின்னணியாகவே அமைந்துள்ளது. முதற் பின்னணியாகிய அவர் இளமைக்கால அனுபவங்களைக் கண்டோம். அடுத்த பின்னணியாகிய நாட்டு விடுதலை இயக்கத்தின் தோற்ற வளர்ச்சிகளை இனி ஆராய்வோம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முனைந்து நின்ற காங்கிரஸ் பேரவை 1885-இல் ஒருசில முன்னேற்றக் கருத்துள்ள ஆங்கிலேயராலும் படித்த இந்தியராலும் நிறுவப்பட்டது. ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தின் இரண்டு படிகள் காங்கிரஸ் தோன்று முன்பே ஏற்பட்டுவிட்டன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்று முன்னரே தென்னாட்டில் பாஞ்சாலங்குறிச்சி வீரர் கிளர்ச்சி செய்து அடக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் 1857 இல் வட இந்தியாவெங்கும் படைவீரர் கிளர்ச்சி எனப்படும் முதல் இந்திய விடுதலைப் போர் எழுந்தது. இதுவும் பெரு முயற்சியுடன் அடக்கப்பட்டது.ஆனால் அதனால் எழுப்பப்பட்ட விடுதலையார்வம் உள்ளூர மக்களிடையே புரட்சிக்கனலை எழுப்பிக் கொண்டேயிருந்தது. மறைவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சக்திகள் குமுறிக் கொண்டிருந்தன. இவற்றை அரசியல் சீர்திருத்த நெறியில் திருப்பும் நோக்கத்துடனேயே ஆட்சியாளர்கள் காங்கிரஸ் பேரவைக்கு ஓரளவு ஆதரவு தந்தனர்.