பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டேயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தில் தமக்குக் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள தம் வேலையாட்களான வெள்ளையர் தம் பாதுகைகளை மெருகிடுவதையும் தம்மிடம் கெஞ்சி வணங்குவதையும் கண்டு மன அமைதி பெறுவதாக அவர் தம் நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பற்றிய நம்பிக்கை

தாய்நாட்டின் பெருமை மதிக்கப்படக்கூடும் இடங்களிலும் போஸ் மகிழ்ந்து ஈடுபட்டார். லண்டன் இந்திய மஜ்லிஸில் திருமதி ரே, திருமதி ஸரோஜினி நாயுடு ஆகிய இந்திய மாதர் திலகங்களும் இந்திய அறிஞர்களும் வெள்ளை அறிஞர்களிடையே சொற்பொழிவாற்றுவதையும் தங்குதடையற்ற பாராட்டுப் பெறுவரையும் கண்டு போஸ் அவ் இந்தியர் பெருமையால் அகம் பூரித்துப் போவார். எடுத்துக்காட்டாக திருமதி ஸரோஜினி பேசியபோது அவர், “திருமதி ஸரோஜினி நாயுடு இங்கே பேசியதைக் கேட்டு என் நெஞ்சு பெருமிதத்தால் இறும்பூது எய்தியது. தன் பண்பாடு, அறிவுத் திறம் ஆகியவற்றின் மூலம் இந்திய மாதர் மேனாட்டினர் உளமார்ந்த நன்மதிப்பைப் பெறமுடியும் என்பதை நான் காண்கிறேன். இத்தகைய மாதரைப் பெற்ற நாடு எதிர்காலத்தில் பெருமையடைவதற்குரியது என்பதில் ஐயமில்லை” என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

மகாத்மா காந்தியுடன் பேட்டி

அல்லும் பகலும் இந்தியா ஒன்று பற்றியே சிந்தித்து வந்த போஸ் இந்தியா வந்து சேர்ந்ததும் வருங்கால அரசியல் திட்டங்களை அறிந்து கொள்ளும் அவாவுடன் மகாத்மா காந்தியடிகளைச் சென்று கண்டார். அவர்கள் சந்திப்பு இந்தியாவின் இறந்த காலப் புகழும் எதிர்காலப் புகழும் நிகழ்காலமென்னும் மேடையில் சந்தித்த சந்திப்புப் போன்றது. இதற்கு முன்பே பேரும் புகழும் வெற்றியும் கண்டு மேலும் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த மகாத்மாவின் முன்னால், வருங்காலப் புகழின் சிறு விதையாகிய போஸ் நின்று பணிவுடனும், ஆர்வத்துடனும், ஆயின் தன் மதிப்புடனும் அறிவுத் திறத்துடனும் பலவகைக் கேள்விகள் கேட்டார். காந்தியடிகள் கூறிய மறுமொழிகளால் போஸ் காந்தியடிகளின்