பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறுப்பில் விடப்பட்டிருந்த கல்லூரியில் அவர் பயன்படுத்தினார். ஈடும் எடுப்புமற்ற தம் அனுபவத்தை அவர் நம் நாட்டார்வம், கல்வியார்வம் ஆகியவற்றுடன் கலந்து இளைஞர்கள் உள்ளங்களில் கல்வியையும் தேசிய ஆர்வத்தையும் சேவையுணர்ச்சியையும் ஒருங்கே ஊட்டினார். அவர் பயிற்சி முறைக்கு உட்பட்ட இளங்காளைகள் தேசிய வாழ்வினை இயக்கும் ஆற்றலுடையவராயினர். அவர் புகழ் தாஸின் புகழின் புதுப் பதிப்பென வளரலாயிற்று.

கறுப்புக் கொடியியக்கம் : சிறை புகுதல்

1922-இல் வேல்ஸ் இளவரசர் (பிற்கால எட்டாம் எட்வர்டு மன்னர்) இந்தியாவைப் பார்வையிட வந்தார். பிரிட்டிஷாரின் அடக்கு முறையைக் கண்டிக்குமுகமாக அவருக்குக் கறுப்புக் கொடிபிடிக்க வேண்டுமென்று தலைவர்கள் கட்டளை பிறந்தது. இக்கறுப்புக் கொடியியக்கத்தில் ஈடுபட்டதற்காகப் போஸ் ஆறுமாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

வெள்ள நிவாரண நிதி

போஸ் சிறையிலிருக்கும்போது வங்கத்தில் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டது. வங்க மக்களிற் பலர் இதனால் வீடிழந்தும் பொருளிழந்தும் தவித்தனர். அரசியற் கொந்தளிப்புக்களினால் அல்லல்பட்ட மக்கள் வாழ்வில் இயற்கையின் கொந்தளிப்பும் சேர்ந்து அமளி பண்ணிற்று. சிறையிலிருந்து வெளிவந்த போஸ் மக்கள் துயரம் கண்டு மனந்துடித்தார். நாட்டுப் பணி என்பது அரசியற் பணிமட்டுமன்று என்று உணர்ந்த போஸ் உடன் தாமே மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து வெள்ள உதவி நிதி திரட்டப் புறப்பட்டார்.

போர் வீரரான போஸ் இவ்வளவு எளிதாகச் செயல் வீரராக மாறிப் பணி செய்ததன் பயனாக, மக்கள் உள்ளத்தில் அவர் நீக்கமிலா இடம் பெற்றார். வங்க மாகாணத்தின் தலைவரான (Governor) லிட்டன் பெருமகனார் அவர் தம் அரசியலின் எதிரி என்றும் பாராமல் இவ்வரும்பணிக்கு அவரை வாயார வாழ்த்தினார். 'அன்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்' என்ற வள்ளுவர்