பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகரவை அதிகாரி : நாட்டுப்பணி

1924-இல் சுயராஜ்யக் கட்சி கல்கத்தா நகரப் பேரவைத் தேர்தலுக்கும் நின்று பெருவெற்றி கண்டது. தேசபந்து தாஸ் நகரப் பேரவைத் தலைவர் (Mayor) ஆனார். போஸ் தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Excutive Officer) அமர்வு பெற்றார். இப்பணிக்கு மாதம் ரூ. 1500 ஊதியமாயிருந்தது. இவ்வுயர்ந்த ஊதியத்தின் பெரும் பகுதியையும் போஸ் ஏழை மாணவர் உதவிச் சம்பளத்திற்காகப் பயன்படுத்தி உண்மைத் தியாகத்திற்கு ஒரு வழி காட்டினார். ஐ.ஸி.எஸ். பட்டம் பெறாது, பட்டத் தகுதி பெற்ற போஸ் தம் பயிற்சியை நன்கு பயன்படுத்திக் காட்ட இஃது ஒரு நல்ல வாய்ப்பாயிற்று. இவ்வளவு இளமையில் அப்பணிக்கு இதற்கு முன் யாவரும் வந்ததில்லை. அப்படியிருந்தும் இப்பதவிக்கு இவரே தகுதி என யாவரும் கருதும் வகையில் போஸ் திறம்படச் செயலாற்ற அரசாங்கத்தாரும் மதிக்கும் நிலையை உண்டு பண்ணினார். உடல் நலம், கல்வி முதலிய துறைகளில் அவர்கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மக்களிடையே பேராதரவு பெற்றன.

தாஸும் போஸும் சேர்ந்து நடத்திய இந்நகர சபை ஆட்சி பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்களை உறுத்தும் அளவு காங்கிரஸ் மயமாயிருந்தது. நகரத் தலைவர் முதல் கையாட்கள் வரை யாவரும் ஒரே கதர் மயமாயிருந்தனர். பிரிட்டிஷ்காரராயிருந்த அதிகாரிகளுக்கு நிறங் காரணமான தனிமதிப்பும் சிறப்புரிமையும் போய்ப் பணியுரிமைகள் மட்டுமே மீந்தன. இவற்றைக் கண்டு ஆட்சியாளர் மனம் வெம்பினர். 1924 அக்டோபர் 24-ஆம் தேதியன்று நாட்டின் தலை முதல்வர் (Governor General) நாட்டில் எவரையும் கலந்து கொள்ளாமல் திடுமென வங்க அவசரச் சட்டமொன்றைப் பிறப்பித்தார். அதன்படி அதே நாள் இரவு போஸும் பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் சட்டசபை உறுப்பினர்களும் கைதாகிக் காவலில் வைக்கப்பட்டனர்.

அலிப்பூர் மாந்தலேச் சிறைகள்

நகரவைத் தலைவரான தாஸ் இச்சட்டத்தையும் அதன்படி தலைவர்கள் விசாரணையில்லாமல் தண்டிக்கப்பட்டதையும் கண்டித்தார். போஸும் மற்றத் தோழர்களும் குற்றவாளிகளானால், அதே குற்றத்துக்குத் தாமும் பொறுப்புடையவரே