என்று கூறித் தம்மையும் சிறைப் பிடிக்கும்படி கோரினார். தங்கள் செயலுக்கு இவ்வளவு எதிர்பாரா எதிர்ப்பு ஏற்பட்டது கண்டும் ஆட்சியாளர் போஸை விடுவிக்கத் துணியாமல் அலிப்பூர் சிறைக்கும் அங்கிருந்து அலெக்ஸர்ஹாம் சிறைக்கும் மாற்றினார்கள். அதன் பின் இந்தியாவில் அவர் இருந்ததால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது என்று எண்ணி அவரை மாந்தலேச் சிறைக்கு மாற்றினார்கள்.
மாந்தலேச் சிறை உரம் பெற்ற கொலைக் குற்றவாளிகளின் நெஞ்சத்தையும் துணுக்குறச் செய்யத்தக்க கோர அனுபவம் நிறைந்ததாயிருந்தது. ஆயினும் போஸும் அவர் தோழர்களும் மனமகிழ்வுடன் அச்சிறை வாழ்வை ஏற்றனர். தம் நாட்டின் விடுதலைக்குரிய விலை கொடுக்கிறோம் என்ற எண்ணம் அவர்களை ஊக்கியது.“இவ்விடத்திலேயே லோகமானிய திலகர் ஆறு ஆண்டுகள் நாட்டு விடுதலைக்காகக் கழித்தார். அதன்பின் லாலா லஜபதி ராய் இதே இடத்தில்தான் ஓராண்டு நோன்பியற்றினார். இந்நினைவுகள் எமக்கு ஆறுதல் அளித்தது மட்டுமன்று; பெருமையும் தந்தன” என்று போஸ் இச்சிறை வாழ்வு பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்விடம் இன்னொரு வகையிலும் இந்தியாவின் விடுதலைக் கோயில் என்று கூறத்தக்கது.1858-ஆம் ஆண்டு நடந்த முதல் இந்திய விடுதலைப் போரில் கலந்ததற்காக இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும் அவர் இளம் புதல்வியாரும் மடிந்தழியும் வரை சிறைவாசம் செய்த இடமும் இதுவே.
போஸ் உண்ணா நோன்பு
மாந்தலே வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி போஸின் உண்ணா நோன்பு ஆகும். போஸும் சிறையிலுள்ள வங்க நாட்டுச் சிறையாளிகளும் தங்கள் நாட்டு விழாவாகிய நவராத்திரியைச் சிறையில் கொண்டாட விரும்பி இணக்கம் கோரினர். சிறை மேற்பார்வையாளர் (Superintendant) ஒருவர் அவர்கள் பக்கம் நின்று அதனை ஒழுங்காக நடத்தும் பொறுப்பைத் தாம் ஏற்பதாகக் கூறினார். ஆனால் சிறை ஆணையாளர் (Prison Commissioner) திரு. பாட்டர்ஸன் இதற்கு இணக்கந்தர மறுத்துவிட்டார். வங்காளிகளாகிய அவ் எட்டுச் சிறையாளிகளும் மிகப் பொல்லாத புரட்சியாளர்கள் என்று