அவர் அதற்குக் காரணம் கூறினார். கேடில்லாத ஒரு விழாக் கொண்டாட உரிமைகூட மறுக்கப்பட்டது கண்ட போஸும் அவர் தோழர்களும் 1925-பிப்ரவரியில் உண்ணா நோன்பு மேற்கொண்டனர். சிறைச் செய்திகள் எதுவும் வெளிவராமல் காக்கப்பட்ட நிலைகளிலும் இஃது எப்படியோ நாட்டு மக்களுக்கு எட்டிற்று. அவர்கள் எழுப்பிய கூக்குரலின் பயனாக அதிகாரிகள் அச்சங்கொண்டு விழாவுக்கு இணக்கம் தந்தனர்.
உண்ணா நோன்பு என்பதை ஓர் அரசியல் கருவியாகப் பலர் பயன்படுத்தியதுண்டு. இந்தியாவில் காந்தியடிகள் அதனை ஓர் ஒழுக்கமுறையாகவே பின்பற்றினார். போஸின் உண்ணா நோன்பு காந்தியடிகளின் உண்ணா நோன்பு போல ஓர் ஒழுங்கு முறையன்று. அநீதியின் அடக்கு முறைக்கு உட்பட்டு வேறு செயலற்ற நிலையிலுள்ளவர்களின் கடைசிக் கருவியாகவே அவர் அதனைப் பயன்படுத்தினார். காந்தியடிகளின் உண்ணா நோன்பின் அடிப்படை தன் ஒறுப்பும், நண்பர்கள் மீது அன்பு ஒறுப்பும் ஆகும், ஆனால் போஸ் மேற்கொண்ட உண்ணா நோன்பின் அடிப்படை தன் மதிப்பும் தன்மான உறுதியுமேயாகும். உயிரைவிடத் துணிந்தும் மானம் காக்கும் உறுதியே இவ்வுண்ணா நோன்பை ஊக்கியது. காந்தியடிகள் நோன்பின் நோக்கம் அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் தவறுகளைக் கண்டித்து அவர்களைப் பணிய வைப்பதேயாகும். தம் நாட்டு மக்களையன்றி எதிரிகளைப் பணிய வைக்க அவர் நோன்பாற்ற வில்லை. போஸ் நோன்பு கொடுங்கோலரையும் எதிரிகளையும் பணியவைக்கும் நோக்கம் உடையதாகும். காந்தியடிகள் உண்ணா நோன்பு மேனாட்டினராலோ தற்கால அறிவுலகத்தினாலோ எளிதில் உணரமுடியாத ஆன்மிக இயல்புடையது.போஸினதோ உலகெங்கும் தன்மதிப்பு உறுதி உடைய மாவீரரால் கையாளப்படுவதும் மதிக்கப்படுவதும் ஆகும்.
சிறைக்குள்ளிருந்தே தேர்தலில் வெற்றி
போஸ் விடுதலை பற்றிய நாட்டு மக்கள் கிளர்ச்சியை ஆட்சியாளர் இரண்டு ஆண்டுகளாகப் புறக்கணித்து வந்தனர். ஆகவே அரசியலாரின் தவற்றைக் கண்டிக்க நாட்டு மக்கள் ஒரு புது வழி கண்டனர். 1926 நவம்பரில் வங்க சட்டசபைத் தேர்தல் வந்தது. சிறையிலிருந்தே போஸையும் அவர் தோழர்களுள்