பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருவரான எஸ்.ஸி. மிதராவையும் நாட்டு மக்கள் இரண்டு தொகுதிக்குப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுத்தனர். புதிய அவை உறுப்பினர் என்ற முறையில் அவர்களை விடுவிக்கும் படி சட்டமன்றமும் வற்புறுத்த நேர்ந்தது. இதற்கும் அரசாங்கம் செவி சாய்க்க மறுத்தது. ஆனால் 1927 ஏப்ரலில் போஸ் கடுஞ்சிறை வாழ்வின் கொடுமையால் அவர் ஈரலில் பழுப்பேறியது. அவர் நிறை 40 கல்லெடை (பௌண்டு) களாகக் குறைந்தது. மருத்துவ அறிஞர் அனைவரும் அவர் நிலை அபாயகரமான தென்று எச்சரித்தனர்.

நோய் நலிவும் விடுதலையும்

விடாக்கண்டர்களாக மக்கள் வற்புறுத்த கொடாக் கண்டர்களாக அரசியலார் மேன்மேலும் பிடிவாதமே காட்டினர். அவர் உடல் நிலையைச் சரிப்படுத்திவிடும் நோக்குடன் அரசியலார் அவரை இரங்கூன் கொணர்ந்து அவரது உடன் பிறந்தார் டாக்டர் ஸுஸீல் சந்திரபோஸ் உள்ளிட்ட ஒரு மருத்துவக் குழாத்தினை அமர்த்தி அவர் உடலைப் பரிசோதித்தனர். அக்குழாத்தினரின் கருத்துரை மீது அவர்கள் போஸ் தம் சொந்தச் செலவில் மருத்துவம் செய்து கொள்வதானால் ஸ்விட்ஸர்லாந்துக்கு அவரை அனுப்ப இணங்குவதாகக் கூறினர். ஆனால் போஸ் இதற்கு இணங்க மறுத்தார். நிபந்தனை மீது தொலை செல்லுவதைவி நாட்டிற்காக அதனருகிலேயேயிருந்து சிறையில் மாள்வதே மேல் என்று அவர் துணிந்தார்.

மே 15-ஆம் நாளில் வேறு வகையின்றி அரசியலார் போஸை இந்தியாவுக்குக் கொண்டுவந்து மாவட்டத் தலைவர் மாளிகையில் மீண்டும் மருத்துவ சோதனை செய்தனர். அதன்பின் மறுநாள் அவர் அவருக்கு நிபந்தனையற்ற விடுதலை தந்தனர். இங்ஙனம் போர் வீரராக ஆட்சியாளர் விருந்தினராய் மாந்தலே சென்ற போஸ், மூன்றாண்டுகட்குப் பின் நோய் வீரராகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தார். அவர் விடுதலைக்காகப் பாடுபட்ட வங்க மக்கள், அரசாங்கம் அவரை விடுவிக்க மறுத்த மறுப்பு மூலம் அவர் உண்மை மதிப்பை நன்கறிந்து கொண்டனர். நண்பர் அன்பின் அளவு பகைவர் எதிர்ப்பின் அளவினால் மட்டுமே அளக்கப்படல் கூடும் அல்லவா?