பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38 ||

அப்பாத்துரையம் - 6




தீவிரவாதிகளின் திட்டங்கள் முழுவதையும் வலது சாரியினர் ஏற்க முடியவில்லை; காந்தியடிகளும் ஏற்கத் துணியவில்லை. ஆயினும் மக்கள் விருப்பத்தை மதிக்க மறுக்கும் ஆட்சியைப் பணிய வைக்க அவற்றைப் படிப்படியாகவாவது கையாள வழியில்லை என்பதைக் காந்தியடிகள் கண்டு பொறுமை எதிர்ப்பியக்கம் தொடங்கத் துணிந்தார். ஆழ்ந்த ஒன்றிரண்டு துறைகளில் மேற்கொள்வதாக முடிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த துறைகள் உப்புச்சட்டம் காட்டுச் சட்டம். குடிவரிச் சட்டம் ஆகிய மூன்றின் எதிர்ப்புமே. 1920-இல் பேரளவில் நடத்தப்பட்ட வெளிநாட்டுத் துணி மறுப்பு, சர்தார் பட்டேல் தலைமையில் வெற்றிகரமான நடத்தப்பட்ட வரிகொடா இயக்கம் ஆகியவை துணியப்படவில்லை. ஆயினும், போட்டி அரசியல் சிறிய அளவில் சில பகுதிகளில் நடைபெற்றது.

புதிய பாரதப் போரின் 'போர்வாள் அபிமன்னன்’

தண்டியில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட உப்புப்போர் அரசியலார் எதிர்பாராவகையில் ஒரு பெரிய தேசியப்போராட்டமாகப் பரவிற்று. இப்போராட்டம் உண்மையில் தற்கால இந்தியாவின் ஒரு புதிய பாரதப் போரேயாகும். புராண காலப் பாரதத்தின் எழுச்சியுடனும் பெருமிதத்துடனும் வரலாற்று வாய்மையின் வீறும், உணர்ச்சியும் இதில் இடம் பெற்றன. இப்பெருங்காப்பியத்தில் காந்தியடிகள், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியவர்கள் கொண்ட பங்கை வீமன், விசயன் ஆகியவர்கள் பங்கு என்று கூறலாமானால், போஸ் பங்கைப் போர்வாள் அபிமன்னன் பங்கு என்று கொள்ளல் பொருந்தும். ஆனால் அபிமன்னன் போரில் முடிவுற்றான். போஸோ நாடுகடத்தப்பட்டு மீண்டும் இரண்டு பெரிய இதிகாசப் போராட்டங்கள் நடத்த வேண்டியவராயிருந்தார்.

சிறை : சிறையிலும் எதிர்ப்பியக்கம்

சட்டமறுப்புப் போரில் வங்கத்தின் பங்கைக் குறைவற நிறைவேற்ற சுபாஷ் போஸும், சென்குப்தாவும் இளஞ்சிங்கங்கள் போல முழக்கமிட்டு முன் வந்தனர். பல இளைஞர்களுடன் இரு தலைவர்களும் 124-ஏ பிரிவின்படி 9 மாதம் சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.