பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42 ||

அப்பாத்துரையம் - 6




அகில இந்திய அரசியல் துயருழந்தோர் மாநாட்டுத் தலைமைப் பேருரையில் போஸ், காந்தியடிகள் சட்டமறுப்புப் போரை நிறுத்தியது பெருந்தவறென்றும், நாட்டு மக்கள் விடுதலைப் போக்கு முன்னிலும் மிகுதியாக ஒடுங்கி நின்று சமயம் அங்ஙனம் நிறுத்திச் சமரசம் செய்வதென்பது மக்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டதாகவேயாகும் என்றும், ஆகவே, சமரச ஒப்பந்தம் கண்டிக்கத் தகுந்ததென்றும் தீவிரமாகப் பேசினார்.

வட்டமேடை ஏமாற்றம் : போஸ் சிறை வாழ்வும் நாட்டு நடப்பும்

1932-இல் காந்தியடிகளும் அவர் துணைவர்களும் இரண்டாம் வட்ட மேடையில் எதுவும் சாதிக்க முடியாமை கண்டு வெறுங்கையுடன் திரும்பினர். பம்பாயில் வந்திறங்கியதும் அவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஒன்று கூட்டினார்.லாகூர் காங்கிரஸ் காலத்திலிருந்து போஸ் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெறாதிருந்தார். ஆயினும், வட்ட மேசைத் தோல்விக்குப் பின் அவர் கொள்கைக்குத் தனி உயர்வு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவரை மகாத்மா காந்தி தனிப்படச் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைத்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை போஸுக்குக் காட்டிய மதிப்பை விடப் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு மிகுதியாக மதிப்பைக் காட்டிற்று. ஏனெனில், காந்தியடிகளை அவர் சந்திக்குமுன்பே அவரை அரசாங்கம் சிறை செய்தது.

சிறையில் இத்தடவையும் போஸின் உடல் நலிவுற்றுக் கடுங்காய்ச்சல் கண்டது. ஆகவே, 1938-இல் அரசாங்கம் அவரை மீண்டும் விடுதலை செய்தது. ஆனால் இத்தடவை செய்த விடுதலை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதாயிருந்தது. உடல் நலம் கருதியே அவர் விடுவிக்கப்பட்டனராதலின் அவர் உடல்நலத்தை மேற்கொண்டு ஐரோப்பா செல்லவே அனுமதிக்கப்பட்டார். இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட வில்லை.அதுமட்டுமன்று. ஐரோப்பாவிலும் ஜெர்மனி, பிரிட்டன் முதலிய ஒரு சில நாடுகளுக்குச் செல்வது தடை செய்யப் பட்டிருந்தது. போஸ் இந்நிபந்தனைகளை ஏற்று மேல் நாடுகளுக்குச் சென்றார்.