பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 49

சென் குப்தா கட்சிப் பூசல் மீண்டும் ஏற்படுவது கேட்டு அவர் வருந்தினர். வங்கத்தில் தம் குழுவினர் பெரும்பான்மை யோராயிருந்தும் இரு கட்சிகளும் சரிசமப் பிரதிநிதித்துவம் வகித்துச் சமரசப்படும்படி அவர்களுக்குப் போஸ் அறிவுரை கூறினார். கொள்கைக்காக எவரையும் அஞ்சாது எதிர்க்கும் இப்போர் வீரர் கட்சிப் பூசல்களுக்கு எக்காலத்திலும் உட்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கைகளில் விட்டுக் கொடுத்தும் கட்சியாதிக்கத்துக்காகப் பாடுபடும் இந்திய மக்களுக்குப் போஸ் வாழ்க்கை வரலாறு ஓர் ஒழுக்க முறை நூல் எனலாம்.

‘தே வலேரா’

இந்தியா திரும்புமுன் 1936ஆம் ஆண்டி ண்டில் போஸ் அயர்லாந்து சென்று அந்நாட்டுத் தலைவர் 'தே வலேரா’வைக் கண்டார். அடிமைத் துன்பத்துக்காளான இவ் இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரிடமிருந்து மற்றவர் அவர்கள் தாய்நாட்டு அரசியல் பற்றி விரிவான விளக்கம் பெற்றனர். இந்தியாவை விட நீண்ட நாளாக அயர்லாந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வந்துள்ளது. இந்தியர் அனுபவிக்கும் கொடுமைகளை எல்லாம் அயர்லாந்தும் அனுபவித்தது. பிரிட்டிஷாரின் சூழ்ச்சி முறைகள் அனைத்தையும் நன்கு அறியப் போஸின் அயர்லாந்தின் அரசியல் பற்றி ஆராய்ச்சி பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.

லக்னோ காங்கிரஸ் - ஜவஹர் அழைப்பு, சிறை புகல்

1936-இல் இந்திய தேசிய காங்கிரஸ் பேரவை லக்னோவில் கூடியது. இடதுசாரியின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான பண்டித ஜவஹர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிலிருந்து நெடுந்தொலைவில் வாழ்ந்து உடல் நலிந்தும் நாட்டுக்கு அருந்தொண்டுகள் செய்து வரும் போஸ் பெருந்தகை இக்காங்கிரஸ் பேரவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பண்டித ஜவஹர்லாலும் மற்றைய தலைவர்களும் பெரிதும் விரும்பினர். ஆகவே நாட்டு மக்கள் சார்பில் ஜவஹர் போஸுக்கும் அழைப்பு அனுப்பினார்.