சுபாசு சந்திர போசு ——————————————— |
|| 55 |
கட்சியினர்க்கு மட்டுமின்றி மற்றவர்கட்கும் திருப்திகரமான தாகவே யமைந்தன. பேரவைக் கூட்டத்தின் போதும் அதன்பின்னும் போஸ் உடல்நலங் குன்றியவராகவே இருந்தும் பரபரப்புடன் எல்லாச் செயல்களிலும் கலந்து உச்ச அளவு உழைப்புச் செய்தார். எதிரிகளுக்கு ஓர் இம்மியளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடைய இவ்வீரர் கருத்து வேறுபாடுடைய தம் நாட்டு மக்களிடமும் தலைவர்களிடமும் என்றுமே சமரச மனப்பான்மையும் நேச முறையும் உடையவர் என்பது அவர் தலைமைக் கால நடுநிலையிலிருந்து நன்கு விளங்கிற்று, அவரது கட்சிப் பற்றும் கோட்பாடுகளுங்கூட நாட்டுப் பற்றுக்கு உட்பட்டு அதற்கு விட்டுக் கொடுப்பதாகவே இருந்தது. மேனாட்டு அரசியல் வாழ்வில் அவர் கண்ட கட்டுப்பாடும் ஒற்றுமையும் அவரது இப்பண்பை மேலும் வற்புறுத்த உதவின. கொள்கை உறுதியும் செயல் திறமும் துணிவும் ஒருங்கே படைத்த இவ்வொப்பற்ற தலைவர் குடியாட்சியைத் திறம்படி நடத்திக் காட்டும் நாட்டுத் தொண்டராகவும் இருந்ததற்கு இதுவே காரணம் ஆகும்.
'வீணையின் உட்கீறல்’
காங்கிரஸ் வரலாற்றில் ஹரிபுரா காங்கிரஸ் மாசு மறுவற்ற ஓர் உயர் உவகை நாடகம். ஆனால் அதனையடுத்து வந்த திரிபுரி காங்கிரஸ் இதற்கு நேர்மாறான துயர் நாடகமாயமைந்தது. வீணையின் உட்கீறல் போல் 1927-ஆம் ஆண்டு சென்னை காங்கிரஸின் போது ஏற்பட்ட வலதுசாரி இடதுசாரி வேறு பாடே இதற்குக் காரணமாகும். லண்டனிலிருக்கும் போதே போஸ் 1935ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மத்திய இணைப்பு ஆட்சி ஏற்படுவதை முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்று இந்திய மக்களையும் தலைவர்களையும் ஊக்குவித்தார். காங்கிரஸிலும் வெளிப்பார்வைக்கு எல்லாருடைய போக்குகளும் இதற்கு ஆதரவாயிருப்பது போலவே தோன்றிற்று. ஆனால் வலதுசாரித் தலைவர்களில் பலர் தீவிரவாதிகளைப் போராட்டத்தில் ஊக்கிக் காங்கிரஸ் பேராற்றலை மிகுதிப் படுத்தியபின் சமரசம் செய்து கொள்வதிலேயே நாட்டங் கொண்டிருந்தனர். காந்தியடிகளின் சமரச மனப்பான்மை இச்சார்பினருக்குத் துணை தருவதாக இருந்தது. ஆகவே