பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62 ||

அப்பாத்துரையம் - 6




9. தேசிய முன்னணி இயக்கமும் மாய மறைவும்

தேசங்கடந்த தேசிய வீரர்

இந்தியாவின் தேசியவாதிகளிடையே போஸின் பணிமிக்க உயர்வானது. கட்சி வாதங்கள் கடந்த தேசிய வாதம் என்னும் நிலை இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, போஸ் போன்ற முதல்தரத் தலைவர்களே கட்சி கடந்த தேசியத்தைக் கனவு காணவும் அதற்காக உழைக்கவும் வகை தேடியவர்கள். ஆனால் காந்தியடிகள் தேசியத்தைவிட அஹிம்சை, சத்தியம் முதலிய சமயக் கோட்பாடுகளிலும் பழங்காலப் பொருளாதார முறைகளிலும் மிகுதியாகப் பற்றுடையவர். ஜவஹர்லாலோ உலக நாடுகளிடையே ஓர் உறுப்பாக, உலகைப் பின்பற்றியே இந்தியா முன்னேற முடியும் என்ற கோட்பாடுடையவர். ஆகவே உலகையாட்டிப் படைக்கும் வல்லரசுகளின் சதுரங்க ஆட்டத்தினிடையே அவர் ஒரு பகுதியாயிருந்து ஆடுபவராய் விட்டார். ஆனால் போஸ் கட்சி கடந்து தேசியத்தைக் கண்டது போலவே, தேசியங் கடந்து தேசத்தையும், தேசங் கடந்து தேச மக்களையும், தேச மக்களையும் கடந்து தேச நலனுக்கான மார்க்கத்தையும் கண்டவர் ஆவார்.

ஊழையும் உப்பக்கம் கண்ட தலைவர்

மற்ற எல்லாத் தேசியத் தலைவர்களும் தேசத்தின் தலைவிதியை ஏற்று நடத்தினர்; போஸ் தேசத்தின் தலைவிதியையே மாற்றியமைக்க முற்பட்டார்; முற்பட்டுப் பெரு வெற்றியும் கண்டார்; முழுவெற்றி காண்பதில் அவருக்கு ஏற்பட்ட தடை ஒரே ஒரு தடைதான் அவர் ஒரு மனிதர், உலகைப் படைத்தழிக்கும் கடவுள் அல்லர் என்பதே. சுருங்கச் சொல்லப்

-