64 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
சென்று தனிக்கட்சி அமைக்க முயன்றவர்கள் மிகச் சிலர். தனிக் கட்சி அமைக்க முயன்று வெற்றி கண்டவர் ஓரிருவர் என்னலாம். அவர்களுள் போஸ் ஒருவர். 1939-லிருந்து 1941 வரை இவர் தோற்றுவித்த கட்சி நன்கு வளர்ச்சியடைந்து வந்ததென்பதில் ஐயமில்லை. போஸ் வெளிநாடு சென்ற பின் அவர் செய்த செயல்களும் உண்மையில் இக்கட்சியைத் தொடர்ந்த செயல்களேயாகும்.
போஸ் உடல்நலம் பெற்றதும் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து தம் தேசிய முன்னணிக் கட்சிக்குக் கிளைகள் அமைத்து அதை ஒழுங்காக ஆக்கினார். அதன் நோக்கங்கள், கொள்கைகள் ஆகியவற்றை விளக்கிப் பிரசாரம் செய்தார். அவர் வெளிநாட்டு அனுபவம், அரசியல் பயிற்சி ஆகியவற்றின் காரணமாக விரைவில் நாடெங்கும் ஒரு புதிய தேசிய இயக்க விதை விதைக்கப்பட்டது. சென்னையில் திரு. ஐயங்காரும், பிற தமிழ்த் தோழர்களும் முன்னணிக் கட்சியை வலுப்படுத்தப்பாடுபட்டனர். போஸின் தமையனார் சரத் சந்திர போஸும் அவருக்குத் துணையாயிருந்தார்.
மேலிட அடக்குமுறையிடையேயும் நாட்டுப்பணி; சிறைப்பரிசு
போஸின் வளர்ச்சியைக் கண்டு வலதுசாரியினர் வாளா இருக்கவில்லை. போஸின் தளராத நிமிர்ந்த தேசிய ஆர்வம் எல்லா இடதுசாரிக் கட்சியினரையும் மீண்டும் ஒருங்கிணைத்துவிடக் கூடும் என்று அவர்கள் கண்டனர். ஆகவே போஸின் செல்வாக்கு மிகுதியாயுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் உரிமைகளைக் குறைத்து மந்திரி சபைகளின் உரிமைகளை வலுப்படுத்தலாயினர். இதனைக் கண்டித்து, போஸ் பிரசாரக் கூட்டங்கள் நடத்தினார். அதன்மீது மேலிடம், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று குறைகாட்டி அவரை வங்கக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்தும் கமிட்டிகளிலிருந்தும் நீக்கிற்று. வார்தாவின் இக்கட்டளையை வங்கக் காங்கிரஸ் கமிட்டி ஏற்கத் தயங்கியபோது அக்கமிட்டியும் நீக்கப்பட்டது. இதனால் போஸின் தமையனார் சரத் சந்திரபோஸும் பதவியிழந்தார்.