116
அப்பாத்துரையம் - 7
ஜூரிச் பல்கலைக் கழகத்திலிருந்த பழமை இரும்புச் சட்டங்கள் இங்கும் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் ஒன்று அயல்நாட்டவர் அமர்வுக் கெதிரானது. மற்றொன்று சமயப் பற்றற்றவர்களுக் கெதிரானது. ஐன்ஸ்டீனின் பெரும்புகழ் முன்னைய சட்டத்தை ஒதுக்கிவைக்க உதவிற்று. தாம் ஒரு நல்ல யூதர் என்று ஐன்ஸ்டீன் உறுதிமொழி கூறிக் கையொப்பமிட்ட பின்பே இரண்டாவது சட்டம் வாய்மூடிற்று.
இந்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களுக்குத் தனிப் பட்ட பணிமுறை உடை ஒன்று இருந்தது. இது கப்பற்படைத் தலைவர் உடையின் மாதிரியில் அமைந்திருந்தது. பணி அமர்வை யடுத்துப் புதிய பேராசிரியர்கள் அந்த உடையிலேயே மன்னரைக் காணவேண்டும். ஐன்ஸ்டீன் பெருசெலவில் இந்த உடையைச் சித்தம் செய்ய வேண்டிவந்தது. ஆனால் பணிமுறை வாழ்வில் இந்த ஒரு தடவை தவிர, அதற்கு வேறு பயன் கிடையாது. பணியை விட்டுச் செல்லும் சமயம் அடுத்த பேராசிரியராக வந்த தம் நண்பர் பிலிப் பிராங்குக்கு ஐன்ஸ்டீன் இந்த உடையை அரை விலைக்குக் கொடுத்தார். பேராசிரியர் பிராங்கின் பணி அமர்வுக் காலத்திலேயே புதிய குடியரசு ஏற்பட்டதால், முடியாட்சிக்கால உடை அதன்பின் தேவைப்படவில்லை. ஆகவே அதை ஓர் ஏழைக் கப்பற் படை வீரருக்குக் கொடுத்துதவினாராம்!
இரண்டு இனங்கள்: இனத்துக்குள்ளும் வேறுபாடு
பிரேக் இன்று ஜெக்கோஸ்லாவியாவின் தலைநகர். ஆனால், அன்று அது ஒரு விசித்திரமான நிலையில் இருந்தது. ஜெர்மானியரே அதை ஆண்டனர். ஜெர்மன் மொழியே ஆட்சிமொழியாயிருந்தது. ஆனால், மக்கள் தொகையில் ஜெர்மானியர் நகரிலேயே நூற்றுக்கு ஐந்து பேராக இருந்தனர். நாட்டுப்புறத்தில் இந்த விழுக்காடு கூடக்கிடையாது. ஆனாலும் ஜெர்மானியருக் கென்று தனிப் பல்கலைக் கழகங்கள், தனிப் பள்ளிக் கூடங்கள், தனி நாடகக் கொட்டகைகள், தனிக் கோயில்கள் இருந்தன. ஜெக் மக்களோ, ஜக்மொழி பேசியவர்களோ இவற்றுக்கு அருகிலும் வரமுடியாது. தங்கள் தாயகத்திலேயே அவர்கள் அடிமைகளாகவும் அயலார் களாகவும் இழிவுபடுத்தி நடத்தப்பட்டனர். உரிமைகள் யாவும் பெரும்பாலும் ஜெர்மானியருக்கே ஒதுக்கப்பட்டிருந்தன.