7. அறிவாட்சியும் பண்பாட்சியும்
அறிவாராய்ச்சியில் நுணுகிச் செல்பவர் அறிஞர். அவர்களே மனித வாழ்க்கையின் அடிப்படையை வகுத்தமைப் பவர்கள்; பண்பாளர் என்பவர்கள்; பண்பாட்சியில் பரந்து செல்பவர்கள்.வாழ்க்கைக்கு இனிமையும் உயர்வும் அளிப்பவர்கள் அவர்களே. இந்த இரண்டு திறங்களும் ஒருங்கே ஒருவரிடமே அமைவது அருமை. அவ்வாறு அமைந்தால், அது பொன்னால் செய்த மலருக்கு மணமும் வாய்த்தது போன்றதாகும். இத்தகைய அரிய வாய்ப்பை நாம் ஐன்ஸ்டீனிடம் காண்கிறோம்.
அவர் காலங்கடந்த, தேசங்கடந்த அறிஞர். அதே சமயம் அவர் தலை சிறந்த பண்பாளராகவும் விளங்கினார்.
என்று
ஐன்ஸ்டீனைப் பலர் அறிவுலக மாயாவி கூறுவதுண்டு. தந்தி,' கம்பியில்லாத் தந்தி,2 தொலை பேசி,3 தொலைக்காட்சி ஆகியவற்றைக் கண்டுபிடித்த அறிஞர்களையும் மக்கள் அறிவுலக மாயாவிகள் என்று கருதிய காலம் உண்டு. ஆனால், அவர்கள் அறிவுலகத்துக்கே மாயாவிகளாகத் தோற்றவில்லை. ஏனெனில் அவர்கள் உலகுக்குப் புதுமை கண்டனர். அறிவுலகின் அடிப்படை அறிவை மாற்றவில்லை. ஐன்ஸ்டீன் அறிவுலகின் அடிப்படைக் கருத்துக்களையே மாற்றியமைத்ததனால் அறிவுலக மாயாவி என்று சிறப்பாகக் குறிக்கப்படுகிறார்.
ஐன்ஸ்டீன் இயற்கைக்கே புத்துருவும் புதுவடிவும் கொடுத்திருக்கிறார். அதை நாம் உணரவேண்டுமானால், இயற்கைபற்றிய பொதுஅறிவை நாம் கடந்துசெல்ல வேண்டும் அறிவியல் உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அறிஞர் கண்டுணர்ந்தவற்றையும் கடந்து செல்ல வேண்டும். அவற்றுக்கப் பால் அவர் கட்டி முடித்த வானளாவிய கட்டடத்தின் உயர அகல நீளத்தை அப்போதுதான் நாம் மதித்துணர முடியும்.