அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
இயற்கை: ஐன்ஸ்டீன் காலத்து முற்பட்ட அறிவு
[161
இயற்கையைப் பற்றிய நம் அறிவு மெய், வாய், மூக்கு, செவி, கண் என்ற ஐம்பொறிகளால் அறியப்படுவது. இவற்றால் ஏற்படும் ஐந்து அறிவுகளையே தொட்டறியும் அறிவு, சுவைத்தறியும் அறிவு, முகர்ந்தறியும் அறிவு, கேட்டறியும் அறிவு, கண்டறியும் அறிவு என்று கூறுகிறோம். இவையே ஐம்புல அறிவுகள். இவற்றுள் மெய், வாய், மூக்கு என்ற முதல் மூன்றும் மிக அருகில் உள்ளபொருள் களையே அறியத்தக்கவை. ஆனால் செவி மேகமண்டலத்திலுள்ள இடியை இங்கிருந்து உணர்கிறது. கண்ணோ வானத்தின் கோடிக் கணக்கான ஒளிக்கோளங்களை இங்கிருந்தே காணவல்லது. நாம் அறியும் உலகின் பேரளவு எல்லை நாம் கண்ணால் காணும் உலகே மனக்கண்ணால், அதாவது பாவனையால் காணும் எல்லைகூட இதைக் கடந்ததன்று.
ஐந்து புலன்களாலும் நாம் உணரும் உலகு எவ்வளவோ பெரிது. ஆனால் இயற்கையின் எல்லையற்ற பரப்பில் அது ஒரு சின்னஞ்சிறு கூறு மட்டுமே. புலன்களால் நாம் உணரும் இச்சிறு பரப்பில் கூட நம் அறிவு மிகமிகக் குறைபட்டது என்று அறிஞர் காட்டுகின்றனர்.
செவியால் நாம் உணரும் ஒலி அலைவடிவாகவே நம் காதுகளில் வந்து எட்டுகிறது. இவை காற்றில் வரும் அலைகள். காற்றில்லாத இடத்தினூடாக இந்த அலைகள் செல்வதில்லை. காற்று நீக்கப்பட்ட குழாய்க்குள், மின்னாற்றலால் ஒரு மணியை இயக்கினால், மணி அசைவதை நாம் காணலாம்; ஆனால் அது அடிப் பதை நாம் கேட்க முடியாது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தியே ஒலித்தடுப்புச் சுவர்கள் அமைக்கப் படுகின்றன. உள்ளே காற்று நீக்கப் பட்ட புழையிடம் இருந்தால், ஒலியலை சுவர் கடந்து செல்லாது.
ஒலி அலைகளைப்போல ஒளி அலைகள் காற்றில் இயங்கு பவை அல்ல. அவை மின்காந்த அலைகளாக வெற்றிடத்தில் இயங்குகின்றன. வானவெளியில் கதிரவனிடமிருந்தும், இன்னும் தொலைதூரத்திலுள்ள விண்மீன்களிடமிருந்தும் ஒளி நம்மை வந்தடைய முடிவது இதனாலேயே. ஏனென்றால் காற்று நம் மண்ணுலகைச் சுற்றி ஒரு சில கல் தொலைவரையே இருக்கிறது.