பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. தார்ன்ஃவீல்டு இல்லம்

செல்வி டெம்பிளின் தலைமையிலேயே நான் லோவுட்டில் ஆறாண்டுகள் அறநிலைய மாணவியாகக் காலங்கழித்தேன். ஆனால், ஆறாண்டுக்குள் நிலையத்தில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. பள்ளியில் தொடங்கிய ஒரு காய்ச்சல் முதலாண்டிலேயே சுற்று வட்டாரங்களிலெல்லாம் பரவிற்று. இதை ஒட்டிப் பள்ளியில் பொது மக்கள் சார்பாகப் பல தேர்வாராய்வுகள் நடைபெற்றன. பெண்களின் உணவு உடைகளில் இது முதல் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. ஆதரவும் பாராட்டும் நன்மதிப்பும் மிகுந்தன. கேட்ஸ்ஹெட்டில் அத்தையிடமும், அவள் பிள்ளைகளிடமும் பட்ட கடுவாழ்வுக்குப் பின் லோவுட்டின் தொடக்கக் கடமை பெரிதன்று. அத்துடன் படிப்படியாக, அது மேம்பாடு அடைந்து வந்தது.

செல்வி டெம்பிளின் நற்பயிற்சியாலும், நன் முயற்சி யாலும் நான் நிலையத்தில் மாணவி நிலையிலிருந்து உயர்த்தப் பட்டு ஆசிரியையாக இரண்டாண்டு தொண்டாற்றினேன்.அதன் மேலும் என்னை அந்நிலையத்திலேயே உயர் பொறுப்பு ஏற்கும்படிதான் அந்நல்லுள்ளம் அவாவாயிற்று. ஆனால் அவள் இதற்குள் மணமுடித்துக் கொண்டு நிலையத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. நிலையத்தார் அனைவருடனும் ஒத்துழைத்து அவளுக்கு நான் சிறந்த விடையளிப்பு விழா நிகழ்த்தினேன். அச்சமயத்தில் நான் அவளிடம் “தாங்கள் இல்லாமல் நிலையத்தில் இருக்க நான் விரும்பவில்லை. தாங்கள் தந்த பயிற்சியை நன்கு பயன்படுத்தி ஏதேனும் நல்ல குடும்பத்தில் வீட்டாசிரியை ஆக இருக்கத்தான் எண்ணுகிறேன்.” என்றேன்.

66

“எங்கிருந்தாலும் நீ வாழ்வாயாக,” என்று அவள் அன்பு வாழ்த்துரை வழங்கி அகன்றாள்.