பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

201

முதலில் எனக்கு எங்கே போவது, என்ன செய்வது என்றே தோன்றவில்லை. பத்திரிகைகளில் என் தோழியர்கள் சில சமயம் விளம்பரங்களைக் காட்டிக் கேலி செய்வது நினைவுக்கு வந்தது. உடனே நான் நிலையத்துக்கு வந்த ஒரு பத்திரிகையில் ஒரு விளம்பரக் கடிதம் வரைந்தனுப்பினேன். அக்கடிதம் இது:

"பதினான்கு வயதுக்குக் கீழுள்ள நல்ல குடும்பப் பெண்களுக்கு ஆசிரியையாக வேலை பார்க்க ஓர் இளநங்கை விரும்புகின்றாள். தாய் மொழியும் இசையும் ஓவியமும் நன்கு கற்பிக்கும் ஆற்றல் உண்டு. கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுக.”

ஜே.அ.

அஞ்சல் நிலையம், லோவுட்

கடிதத்தை அனுப்பியதும், வாழ்க்கை தொடங்கும் வகையில் முதற்படியில் ஓர் அடி எடுத்து வைத்து விட்டது போன்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு நாளும் நான் மறுமொழியை எதிர்பார்த்து அஞ்சல் நிலையம் சென்று மீண்டேன். ஒரு வாரமாயிற்று. நான் நம்பிக்கை இழக்கலானேன். அச்சமயம் ஒரு கடிதம் வந்தது. அது வருமாறு:

"செல்வி ஜே.அ.தம் நன்னடத்தைக்கும் திறமைக்கும் தக்க சான்றுப் பத்திரங்கள் தரமுடியுமானால், இக் குடும்பத்திலுள்ள ஒரே மாணவியின் பொறுப்பு அவரிடம் விடப்படும். மாதம் முப்பது பொன் ஊதியமும் தரப்படும். மில் கோட்டில் தார்ன்ஃவீல்டு இல்லத்தில், திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்ற முகவரிக்கு மறுமொழி அனுப்பும்படி செல்வி ஜே.அ. கோரப்படுகிறார்."

கடிதத்தை நான் நன்கு ஆராய்ந்தேன். முதுமை வாய்ந்த ஒரு மாதின் கையெழுத்து அது. திருமதி ஃவோஃவக்ஸே எழுதியிருக்க வேண்டும் என்பதையும், அவர் ஒரு முதிய மாது என்பதையும் இது காட்டிற்று. கடிதம் மொத்தத்தில் எல்லா வகையிலும் எனக்குப் பிடித்தமாகவே இருந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் கோரிய சான்றிதழ்கள் என்னிடம் இருந்தன. அவற்றை அனுப்பினேன். மறு அஞ்சலிலேயே மறுமொழி