240
அப்பாத்துரையம் 7
வருவதற்குள் என் நெஞ்சைத் திடுக்கிட வைக்கத்தக்க ஒரு கனாக்கண்டு நான் மிகவும் பரபரப்படைந்தேன். இது திருமண வினைக்குரிய தீக்குறியாய் விடுமோ என்று அஞ்சினேன். அதுவகையில் ராச்செஸ்டரைக் கண்டு எச்சரிக்கை தரவும், அவர் ஆறுதலால் அமைதிபெறவும் நான் துடித்தேன்.
மணநாளன்று காலையிலேயே அவர் வந்தார். நான் அவருக்காகக் காத்திருக்கப் பொறுக்காமல் அவர் வரும் வழியில் நெடுந்தொலை சென்று காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாக நீண்டது. இறுதியில் அரை நில வொளியில் அவர் குதிரைத் தலையைக் கண்டு முன்னோடிச் சென்று வரவேற்றேன்.
என்னைக் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியே. அதே சமயம் என்ன செய்தி என்ற கலவரக் கேள்வியும் எழுந்தது. பேரிடர் எதுவுமில்லை என்று உய்த்தறிந்ததும், “நானில்லாமல் உன்னால் ஒருநாள் கூடக் கழிக்க முடியாதென்று எனக்குத் தெரியும். எங்கே என் குதிரைமீது தள்ளி ஏறு பார்க்கலாம்,” என்றார்.
என் ஆர்வம் என்னுள் ஓர் இளங்குதிரை போலத் துள்ளிற்று. நான் அவர் நீட்டிய இரு கைகளையும் பிடித்துத் தாவி ஏறி அவர்முன் உட்கார்ந்து கொண்டேன். வீட்டண்டை வந்ததும் அவர் என்னை இறக்கிவிட்டார். நான் அவருக்குமுன் அறைக்குச் சென்றேன்.
அன்றுதான் நான் அவர் மடிமீது உட்கார இணங்கினேன். நான் என் கனவை, கனவு கண்ட உணர்ச்சி ஒரு சிறிதும் குன்றாமல் எடுத்துரைத்தேன்.
"தார்ன்ஃவீல்டு இல்லம் எரிந்து விழுந்ததாக நான் கனவு கண்டேன். அதில் நீங்கள் இடரில் சிக்கியிருந்தீர்கள். உங்களை மீட்க நான் உட்குதித்தேன். குதித்ததன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.ஏனென்றால் நான் விழித்து விட்டேன்,” என்றேன்.
அவர் இதைக்கேட்டுச் சிரித்தார். “இவ்வளவு தானா? இதற்கா இவ்வளவு அச்சம்! என்னை மீட்டிருப்பாய், இப்போது என் வாழ்விலிருந்து மீட்கிறாயே அதுபோல," என்றார்.