ஜேன் அயர்
259
வழியிலெல்லாம் என் உள்ளம் என்னைப் பலவாறு சுட்டது; ‘அன்று உன் தன்மதிப்பை எண்ணி உன் உயிரினும் அரிய ஒருவரை இன்னலின் பொறியில் சிக்கவைத்து விட்டுச் சென்றாய். இன்று ஏனோ இந்த விரைவு?' அவர் வேண்ட நீ மறுத்தாய்? இப்போது நீ வேண்ட அவர் மறுத்தால்?' அவர் இப்போது உன் முகத்தில் விழிப்பாரோ, மாட்டாரோ?' அவர் மனம் மாறியிருந்தால்! - அவர்நிலை உடல் எப்படியோ? உயிர் இருக்கிறதோ இல்லையோ? உண்மையில் உயிர் இருக்கிற போது காலால் சவட்டி எறிந்த நீ, உன் மனச்சான்றைப் பசப்பி ஏய்க்கத்தானே இப்போது கரிசனை காட்டுகிறாய்?' என்று பலவாறு என் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் எண்ண அலைகள் என்னைக் குத்திக் கிளறின.
நான் தார்ன்ஃவீல்டை யடைந்தேன். வழியில் நகரிலேயே யாரிடமாவது விவரம் உசாவியிருக்கலாம். ஆனால், கேட்க என் உள்ளம் கூசிற்று. யாரிடமும் பேசாமல் விரைந்து சென்று வீட்டின் முன்புறத்திலிருந்து அதன் வாழ்க்கை நிலையை உய்த்தறிந்தபின் உட்செல்ல எண்ணினேன்.
ஆனால், இல்லத்தை அணுகுமுன்பே அதன் காட்சி என்னைத் திகைக்கவைத்தது. முன்புறமும் பின்புறமும் உள்ளும் புறமும் எல்லாம் இடிந்து பொடிந்து, வெறும் பாழாகக் கிடந்தது. எங்கும் பற்றியிருந்த கரியும் தூசியும் அது தீக் கிரையாய் அழிந்த கட்டடம் என்பதைக் காட்டின. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறைந்து பார்க்க வேண்டிய அவசிய மில்லாமலே உள்ளே சென்று எங்கும் சுற்றினேன். அங்கே கூடுகட்டியிருந்த சிலந்திகளும் பறவைகளுமல்லாமல் நிலை மையை விளக்க வேறு எவருமில்லை.
நான் வந்த வேகத்தைவிட இரட்டிப்பு வேகத்தில் நகருக்குத் திரும்பினேன்.நகரும் ஓரளவு மாறியிருந்தது. ஆயினும் முன் நான் வந்து தார்ன்ஃவீல்டு இல்லம் பற்றி உசாவிய அதே அருந்தகம் சென்று உசாவினேன்.
தார்ன்ஃவீல்டு இல்லமா? ஏன்? என்ன வேண்டுமா?'
என்றான் ஒருவன்.