5. தென் ஆஃப்ரிகா செல்லல்
சமயப் பணிக்கு அர்ப்பணம்
நம் வாழ்க்கையை உருவாக்கும் செயல்கள் பல, நாம் எண்ணாமலேயே நம் முன் வருவதுண்டு. ஆயினும் நம் உள்ளத்தைச் சார்ந்த விருப்பு வெறுப்புகள் அவற்றிடையே தமக்கு உரிய திறத்தை நம்மையும் அறியாமலே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. லிவிங்ஸ்டன், தம் கிராமத்தில் உள்ள ஒரு சமயப்பணி நிலையத்தின் கிளை மூலம் சமயப் பணியாளர் பலருடைய வரலாறுகளைப் பற்றிக் கேள்வியுற்றார். அவர் களுக்காகத் தம்மால் இயன்ற அளவு பொருள் உதவி செய்யவும் உறுதி செய்திருந்தார்.ஆனால் சார்ஸ் கட்ஸ்லாஃப்ட்' என்ற சீனப் பணியாளர், ‘சமயத்துக்குப் பன்னூறு இளைஞர் வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். அதனை அறிந்த லிவிங்ஸ்டன், பொருள் உதவுவதுடன் அமையாமல் தம் வாழ்க்கை முழுவதையுமே அத்துறைக்கென ஒப்படைக்கத் துணிந்தார்.
லிவிங்ஸ்டன் சிறுவயதிலிருந்தே சிறுசமய உட்பிரிவு களைப் பாராட்டாதவர். ஆதலின் இவர், பரந்த அடிப் படையும் பொது நெறிப்போக்கும் உடைய லண்டன் சமயப் பணிக் கழகம் சார்ந்து தொண்டாற்ற முன் வந்தார். சீன நாட்டுக்குச் செல்ல எழுந்த இவர் எண்ணம், அப்போத அங்கு நடந்த அபினிப்போரால்2 சற்றே தடைப்பட்டது. அப்போது லிவிங்ஸ்டன் மோபாட்டின் ஆஃப்ரிகப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே இவர் ஆர்வத்துடன் அதனை மேற்கொண்டார். ஏழைகளுக்கு உழைப்பதே உயர்வு எனக்கொண்ட இவர், நாகரிக உலகில் ஏழ்மைப் படியிலிருந்த ஆஃப்ரிகாவில் பணியாற்ற முனைந்தது பொருத்தமுடையதே ஆகும்.