பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

79

பண்புகளே விடையும் விளக்கமும் தரமுடியும். அவர் வாழ்க்கை வரலாறு இவ்வகையில் நமக்குச் சிறந்ததொரு படிப்பினை தர வல்லது.

மற்ற ஆராய்ச்சி அறிஞர்களின் எல்லை கடந்து அவர் இயற்கையின் இதயத்தையே காண அவாவினார். இயற்கையும் பிறர் எவர்க்கும் எளிதில் திறக்காத தன் உள்ளக் கதவை அவருக்குத் திறந்து காட்டிற்று. அதன் உள்ளார்ந்த செல்வங்களை அவர் மனித உலகுக்கு எடுத்து வழங்கினார்.

இயற்கையின் செல்வம் எல்லையற்றது. எண்ணில் அடங்காதது. பொருள், ஆற்றல், அறிவு, அழகு, இன்பம் நலம் ஆகிய பல்வேறு வண்ணங்களாக அது எங்கும் பரவி நிறைந்துள்ளது.

மனிதன் இயற்கையின் செல்வத்துக்கு உரிமை உடையவன். ஆனால், இயற்கையை உணரும் அளவிலேயே அதை அவன் தனதாகப் பெற்றுத் துய்க்கமுடியும். இயற்கையை உணரும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களே மனித இனத்தின் முன்னோடிகள் ஆவர். அவர்கள் அறிவே உலக அறிவாக, பொது மக்கள் அறிவாகப் பரவி உலக நாகரிகத்தை வளர்க்கிறது.

மனித நாகரிக வளர்ச்சியில் நாம், மனிதன் அறிவுநிலையின் மூன்று படிகளைக் காணலாம். அவையே பொது அறிவு (General Knowledge or Common Sense) பகுத்தறிவு அல்லது புத்தறிவு (Rationalism) அடிப்படை அறிவு அல்லது மெய்யறிவு (Reason) என்பவை.

ஒவ்வொரு தலை முறையிலும் முன்பே அறியப்பட்ட அறிவு பொது அறிவு ஆகும். ஒவ்வொரு தலைமுறையிலும் பகுத்தறிவுடன் துணை கொண்டு அறிவியல் அறிஞர் இயற்கையின் செல்வக் குகையிலிருந்து புதிய செல்வம் பெற்றுத் தருகின்றனர். அறிவு வட்டியாகிய புத்தறிவு இதுவே. இது அடுத்த தலைமுறையின் பொது அறிவாகிய அறிவுமுதலோடு சேர்ந்து புதிய பொது அறிவா கிறது.இவ்வாறு தலைமுறைதோறும் பொது அறிவின்படி உயர்கிறது.