8. புயல் எதிர் புயல்
அயர்லாந்தின் அரசியலிலிருந்து ஷா விலகியிருந்தார். பிரிட்டனின் அரசியலிலிருந்தும் 1912-க்குள் விலகியே நின்றார். ஆனால், அவர் அதே ஆண்டில் திடுமென வெளி நாட்டு அரசியலில் கருத்தைத் திருப்பினார். ஆங்கில நாட்டு அரசியலின் அயல்நாட்டுப் பணிமனைக்கு அவர் எழுதிய கடிதமொன்றில் பிரிட்டன், ஃபிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நான்கு வல்லரசுகளும் சேர்ந்து ஐரோப்பாவில் அமைதியை அரண் செய்யவேண்டுமென்று கூறினார்.
1913-ல் நாள்முறைக் காலக்குறிப்பு(Daily chronicle) என்ற இதழில் ‘படைக் கலங்களும் ஆட்சேர்ப்பும், போரெதிர்க்கும் ஒரு மூவிணைப்பு நேசர் குழு' என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை ஷாவினால் எழுதப்பெற்றது. தாக்குதல், தற்காப்பு ஆகிய இரண்டு தரப்பிலும் பிரிட்டன், ஃபிரான்சு, ஜெர்மனி ஆகிய மூன்று வல்லரசுகளும் தனித்தனி ஒப்பந்தம் செய்யும்படி பிரிட்டன் வற்புறுத்தவேண்டு மென்று அவர் இதில் கூறியிருந்தார். பிரிட்டன் இதனைச் செய்ய முன் வந்தால், ஜெர்மனியோ, ஃபிரான்சோ அதை மறுக்கத் துணியமுடியாது; ஏனெனில், மறுக்கும் நாடு தனிப்பட்டு விடும் என்பதை ஷா காட்டியிருந்தார். அத்துடன் வலிமைவாய்ந்த படையே அமைதி சார்பிலும் மிகுதி உதவுவது என்றும், வயது வந்தவர் அனைவர்க்கும் போர்ப்பயிற்சிப் பொறுப்பு ஒரு நாட்டுரிமைத் திட்டமாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார். முதலுலகப் போரில் அவர் வற்புறுத்திய இச்செய்திகள் பிரிட்டனால் இரண்டாம் உலகப் போர்வரை கவனிக்கப்படா திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷா பொருளியல் துறையிலும் கருத்துச் செலுத்தி வந்தார். தே ஆண்டில் அவர் 'நிகர்நிலையின் சார்வு எதிர்வுகள்' (Case for