அறிவுலக மேதை பெர்னாட்சா
127
equality) என்ற ஒரு கட்டுரை வெளியிட்டார். உழைப்பூதியம் கிட்டத்தட்டச் சரிநிகர்நிலையடையும் முறையில் அதையே குறிக்கோளாகக் கொண்டு பொருளியல் சீர் திருத்தங்களில் முனையவேண்டும் என்று அவர் இதில் விரித்துரைத்தார். இவற்றால் அடிமைப் பண்புக்கு மாறாக, தன்விருப்புடைய இணக்கமும், வகுப்பு வேறு பாட்டடிப்படையிலன்றி விருப்ப அடிப்படையுடைய மண உறவுகளும், வகுப்பு வேறுபாட்டடிப் படையிலன்றி நேர்மை அடிப்படையுடைய நல்லொழுக்க முறையும் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
படக்காட்சி அரங்கம் (Play pictorial) என்ற இதழில் இச்சமயம் ஷா பழங்கால நாடகத் தலைவர், இக்காலத் தலைவர் வேறு பாட்டை விளக்கினார்: “இப்போது மக்கள் தேவைப்படும் கதைவீரர் நம் மனிதப் பண்புகளையே எடுத்துக் காட்டுபவர்கள். ஒரே வீரவெறியில் தனித்துநின்று பெருநடை, பேருரையாற்றி, பலரைத் தனித்தெதிர்த்துப் போராடிச் சலிப்பூட்டும் முறைக்கு மாறாக, இத்தகைய உயர் முகடுகளை அவ்வப்போது மட்டும் எட்டி, நகை அவலம் முதலிய பள்ளங்களில் அவ்வப்போது இறங்கி மற்றச் சமயங்களில் மனிதர்நிலை மட்டத்திலேயே செயலாற்றுபவர்கள் அக்கால வீரர்கள். காலமும் இடமும் இன்றி எப்போதும் வானிற் பறப்பவர்களும், அகழியில் உழல்பவர்களும் அல்லர் இவர்கள்." 1914-இல் எழுதப்பெற்ற 'பெற்றோரும் பிள்ளைகளும்,' என்ற கட்டுரை பொருளியலிலிருந்து கல்விக்குத் தாவுகிறது. "பிள்ளைகள் பிறப்பிலேயே சில நற்சார்புகளும் சில அல்சார்புகளும் உடையவர்கள். கண்டிப்பு, சலுகை ஆகிய இரண்டுமே அவர்களைத் தனிநின்று திருத்துபவையல்ல. ஆனால், இரண்டில் பிந்தியதே மிகத் தீமை செய்வது. கல்வி அவர்களுக்கு இருதரப்பட்டது. பிறருக்குத் துன்பமின்றி, தான் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிகாண்பது ஒருபடி. அரசியல் (குடியுரிமை), சமயம் ஆகிய துறைக்கல்வி அடுத்தபடி. இரண்டாவது படியில் முடிந்த முடிபான அறிவைவிட, பல் சார்புடைய அறிவை அப்படியே அறிவுத்தொகுதியாகக் கொள்வதே சிறப்புடையது. இவ்விருபடிகளும் கடந்தபின் தன்னியலாக எல்லாரும் கற்க விடப்படவேண்டும். அரசியல் அதற்கான துணைக்கருவிக்களங்களை அமைக்கவேண்டும். இம் மூன்றாம் படிக் கல்வியே உயர்தர நாகரிகக் கல்வி(Liberal education) எனப்படும்." குடும்பம், கல்விபற்றிய ஷாவின் தெளிவுரை இது.