அறிவுலக மேதை பெர்னாட்சா
133
அதனைப் புறக்கணித்தனர். இப்போது நான் அவர்களுக்குக் கொடுங்கொலைக் கூற்றுவனைத் தருகிறேன். இப்போது அவர்கள் வாழ்த்துப்பாடுகிறார்கள். வாழ்க்கைவளம்பெறத் தராத பணத்தை அதை அழிக்கத் தருகிறார்கள் வரி தருவோர்," என்ற கெய்ஸரின் சொற்கள் மனித இனத்தின் ஒரு
குறைபாட்டையே தூண்டிக் காட்டுகின்றன.
“அகஸ்டஸின் சிறுதொண்டு" போர்க்காலப் பணிமனை களின் திறமையின்மையைப் படம்பிடித்துக் காட்டிக் கிண்டல் செய்து அல்லது வசையாக்கித் தாக்குகிறது. போர்முயற்சியின் பாரிய அளவே இத் திறமையின்மைக்குக் காரணம். பேரரசுப் பயிற்சிபெற்ற புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். திறம் பட்ட பழைய ஆட்களின் திறமை வெற்றிக்கு உதவினும், பிறர் துணை உதவி அதற்கிணங்கச் சரிசம நிலையடையாதது இயல்பே. ஆயினும், ஷாவின் தாக்குதல், அக் குறைபாட்டைப் பொது மக்கள் கண்முன் கொண்டுவரும் நற்பணி செய்தது என்பதில் ஐயமில்லை.
போரின் முடிவு ஷாவின் வாழ்க்கையில் ஒரு பகுதியின் முடிவைக் குறிக்கிறது என்னலாம். உண்மையில் இப்போது அவர் 60 ஆண்டுக்கு மேற்பட்ட கிழவரே யாயினும், அவர் பேச்சும் உரையும் இப்போது கூட அவற்றின் துடுக்குத்தனத் தையோ, நிமிர்ந்த இறுமாப்பையோ, எதிர்கால நோக்கிய தன்னம்பிக்கையையோ இழந்துவிடவில்லை. ஆயினும், உள்ளார்ந்த அறிவுப்பண்புகளை நோக்க, இப்பருவமே ஷாவின் இளமைக்காலம்; அஃதாவது, வளர்ச்சிக்காலம் முற்றிய பருவம் என்னலாம். இதற்குப் பிற்பட்ட நூல்களில் போராட்டப் பண்பு சிறிது குறைவுற்று அவர் செயலறிவுமுதிர்ச்சியும், அருட்கனிவும், கலைப்பண்பும் நிறைவுற்றுக் காணப் பெறுகின்றன. அவர் கலை ஞாயிறு தன் உச்சநிலை திரிந்துவிட்டதாயினும், அதன் ஒளிக் கதிர்கள் மாலைவானிற் சிதறுண்டு பல்வண்ண ஓவியங்களாகப் பரக்கின்றன.
1913-ல் ஷாவின் அன்னையாரும், 1920-ல் அவர் தமக்கை யார் லூஸியும் காலமாயினர். போர்க்கால அதிர்ச்சியும், அவர் வாழ்வில் முதல் தாயக ஒளியாயிருந்த அன்னையாரும் தமக்கை யாரும் பிரிந்ததால் ஏற்பட்ட தனிமையுமே, அவர் வாழ்வின்