9. மாலைச் செவ்வானம்
ப்
ஷாவின் கொள்கை உறுதியை அவர் வறுமையிடையே காணலாம். அவர் போராட்டப் பண்பை அவர் இடைக்கால வாழ்வில் காணலாம். ஆனால், அவர் வாழ்க்கையிறுதியிலேயே காணலாம். அவர்வாழ்வின் இம்முழுநிறை பண்பை இப் பருவத்தில் பலரும் உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் காண்கிறோம். 1916-ல் கிரெகரிப் பெருமாட்டி தாம் இயற்றிய 'பொன் இலந்தைப்பழம்' (Golden Apple) என்ற நூலை அவர் பெயருக்கப்படைப்பாக்குகையில், “என் நண்பருள் இனிய நற்பண்புக்குரிய நண்பரான ஜார்ஜ் பெர்னார்டு ஷாவுக்கு,” என்று அவரைக் குறிக்கிறார். போர்க்காலத்தில் காயம்பட்ட படைவீரர் பாடியில் பல பணி மனையாட்களுடன் அவர் பழகிவந்தார். அப்போது ஒருவர் அவரைப்பற்றிப் பிற்காலத்தில், “நாங்கள் கண்ட மனிதருள் பணிவுமிக்கவரும், இயேசு கிறித்து வுடன் மிகவும் ஒப்புமையுடைய அருளாளரும் அவரே. உண்மை யில் இப் பண்பை முதலில் கண்டு பாராட்டியவர் எங்களிடையே உள்ள ஒரு சமயத்துறைவரேயாகும்," என்றாராம்!
1924-ல் ஷாவின் உயர்கலைப் பண்புகளும், உலக அமைதிக்கு அறிவுத்துறை, கலைத்துறைகளில் அவர் ஆற்றிய நற்பணிகளும் உலகெங்கும் நன்மதிப்புப்பெற்றன. இதன் சின்னமாக அவ் வாண்டில் அவருக்கு இலக்கியச் சார்பில் நோபல் பரிசு வழங்கப் பெற்றது. ஷா அதன் வருவாயை அப்பரிசுவழங்கிய செல்வரான டாக்டர் நோபெலின் தாய்நாட்டின் நன்மையையும், உலக நன்மையையும் பெருக்கவே செலவு செய்தார். ஆங்கிலம் பேசும் நாடுகள் எல்லாவற்றிலும் ஸ்வீடன்நாட்டு இலக்கிய, கலைப் பண்பாடுகளை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அவர் அவ் வருவாயை ஈடுபடுத்தினார்.