பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

151

மன்னன் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. முதலாம் சார்ல்ஸ் மக்கட் புரட்சியால் தலையிழக்க, சிலகாலம் கிராம் வெல் என்னும் வீரன் குடியரசாட்சி செலுத்தினான். பிரிட்டன் குடியரசை உணராத அக்காலத்தில், மக்கள் அதனை உதறித் தள்ளி முதலாம் சார்ல்ஸின் புதல்வன் இரண்டாம் சார்ல்ஸை மன்னராக்கினார். குடியும் கூத்தும் காதலும் புதியமன்னன் வாழ்க்கைக்களமாயின. ஆனால், மன்னன் அரசியலில் மிகவும் சூழ்ச்சிநயங்களில் வல்லவனாய் ஆண்டான் இன்ப நாடகம் அவன் நாளில் உயர்நிலை பெற்றது. ஆனால், ஷா இத்திறங்களை நாடகமாகத் தீட்டவில்லை. அவர் சார்ல்ஸ் அவைக்களத்தை அக்பர் அரசவையிலுள்ள ஒரு சமய, கல்வி ஆராய்ச்சிக்கூடமாக்கி உலகம், சமயம், உடல், உயிர் ஆகிய பழைய உலகக் கோட்பாடு களையும், அவற்றின் போர்வையுள் படைப்பு, உயிர்வளர்ச்சிக் கோட்பாடு, ஒப்பியல்நெறி ஆகிய தற்காலக் கோட்பாடுகளையும் ஆராய்ந்து விளக்குகிறார். சுவைநயமும் ஆர்வமும் உடைய இவ்வுரையாடல்தொகுதி எல்லையிலா வானவெளியில் நடத்தப் படும் சொல்திறமிக்க உதைபந்தாட்ட மெனக் காட்சி யளிக்கிறது. நாடகமரபிலுள்ள வாளும் காதலும், கோமாளியும் செயலுறுப் பினரும், ஷாவுக்கு வழக்கமான கோட்பாடும் முடிபும் யாவும் இங்கே கைவிடப்படுகின்றன. ஷாவின் கட்டுப்பாடற்ற புனை வாற்றலின் ஒரே திருவிளையாடலாய், கலை கடந்த கலையாய் இந்நாடகம் புதுச் சுவையின் மூட்டுகிறது.

நல்வேந்தன் சார்ல்ஸையே ஷாவின் இறுதிநாடகமாகக் கொள்ளத்தகும். அதன்பின்னும் 1948-ல் பிஃவ்வின் என்ற பெயருடன் முதலிலும், கிளர்ச்சிகொள் கோடிபத்தாயிரம் (buoyant billions) என்னும் நாடகமும், அதன்பின் முடியாது விடப்பட்ட மற்றொரு நாடகமும் எழுதப்பெற்றன.

ஷாவின் திருமணத்தை அடுத்து அவர் திருமதி ஷாவின் தூண்டுதலால் அயர்லாந்து சென்றிருந்தார். ஆனால், அதற்குள் இங்கிலாந்தில் அவர் பெரும்புகழ் பெற்றிருந்த போதிலும், அயர்லாந்து அவர் பெருமையையோ, அவரால் தனக்கு வரும் சிறப்பையோ உணரவில்லை. 1943-ல் திருமதி ஷா உலகவாழ்வு நீத்தார். அதுமுதல் ஷா முன்னிலும் மிகுதியான தனித்துறவு வாழ்வே வாழ்ந்து வந்தார்.