அறிவுலக மேதை பெர்னாட்சா
153
பரிசுகளை யாரும் அனுப்பக்கூடாது என்று அவர் திட்டம் செய்திருந்தார். அப்படியும் வந்த பரிசுகளை அவர் அறநிலையங் களுக்கு வழங்கிவிட்டார்.
1950 செப்டம்பர் 17 -ல் அவர் தம் தோட்டத்தல் உலவிக் கொண்டிருக்கையில் கீழே இடறி விழுந்தார். இதில் அவர் கால் எலும்பு முறிவுற்றது. அறுவை மருத்துவம் செய்தும் நிலைமை மாறி அவர் 1950 நவம்பர் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார். 94 ஆண்டு வாழ்ந்து நிறைவாழ் நாளுடன் அவர் பிரிந்தனரானாலும், அவர் பிரிவு உலகுக்கு அதிர்ச்சியும், வருத்தமுமே ஊட்டிற்று. ஏனெனில், அவர் இறுதிவரை அறிவுளம் குன்றாது, வாழ்க்கையில் முழுப்பங்குகொண்டவர். அவரை உலகம் தம் உலகின் ஒரு பழங்கால மிச்சம் எனக் கருதாது, தன் புதுமையின் ஒரு பகுதி எனக் கொண்டிருந்தது.
ஷா தம் இறுதி விருப்ப ஏட்டில் தம் உடல் எரிக்கப்படவே வேண்டும், புதைக்கப்படக் கூடாதென்றும், முன்பே எரிக்கப் பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தம் மனைவியின் சாம்பலுடன் தம் சாம்பலைக் கலந்து தம் வீட்டிலோ தம் தோட்டத்திலோ தூவப்படல்வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நூறாயிரம் பொன் அளவான தம் பாரிய செல்வத்தை அவர் ஆங்கில மொழி எழுத்துச் சீர்திருத்தங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று குறித்துள்ளார்.
நூறாண்டு அறிவுலகின் அறிவுப்புயலாக வாழ்ந்த பெரியாரின் அறிவமைதியுடைய இறுதி விருப்பம் இது!