பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

159

ஷாவின் அருட்பண்புத் திறம் ஒன்றே அவரைக் காந்தியடி களைப்போன்ற உலகப்பெரியாராக்கப்போதியது. அவர் அறிவுப் பண்பு, அவரைச் சாக்ரட்டீஸின் மரபில் வந்த இருபதாம் நூற்றாண்டின் சாக்ரட்டீஸாக்க வல்லது. அத்துடன் அவர் கலைப்பண்பும் உண்மையில் ஷேக்ஸ்பியரின் பண்பிற் குறைந்த தல்ல என்பதை அவருடைய ஒரு சில தனிக் கலைப் படைப்புக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அவர் அறிவுத்திறம் கலையை மறைக்குமளவு முனைப்புடைய தாயினும், அது கலைத்திறத்தின் மீதே எழுப்பப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மேலாக அவர் ஒரு போர்வீரர். அறிவுப் படைக்கலங் கொண்டு சீர்திருத்தக் களத்தில் வெற்றி நாடிய செம்மல் அவர்.

1933-இல் கில்பெர்ட் மரே அவருக்கு உரிமைப் படுத்திய தம் அரிஸ்டாஃவானிஸ் பதிப்பின் படைப்புரையில் ஷாவைப் பற்றிக் கூறுவதாவது:

"இக் காலத்தின் சூழ்நிலைகளிடையே மீட்டும் பண்டை உலகப்பெருநகை அறிவுவிளக்க அறிஞர் ஒருவர் வரவைப் பலரும் விரும்புவர். போர்க்காலப் பித்தவெறிகள், குறுகிள குருட்டுத் தப்பெண்ணங்கள் ஆகியவற்றிடையே அவற்றைச் சிறிது அகற்றிக் காட்ட வால்ட்டேரின் ஓர் உயிர்ப்புக்காற்று, பகைமையா லெழுப்பப்பெற்ற பொய்மைச் சூழலிடையே சற்று ஓய்வு தந்து சிந்திக்கத் தூண்டும் ஓர் இராஸ்மஸின் அமைதி ஆகியவற்றுக்கு நாம் ஏங்கியிருந்தோம். சென்ற பல ஆண்டு களாக, என்னளவில், இன்றும் சிறப்பாக, என்மனம் அரிஸ்டோஃவானிஸை நாடியே அலமந்து நின்றது. அவர் புகழ்பெற்ற களிநாடகங்களிரண்டில் இறந்தபின் மீண்டும் உயர்பெற்றெழுந்த பெருந்திறல் வீரரைப் பற்றிக் கூறுகிறார். இவ் வகையிலேனும் அவர் வந்து இக் காலத்தவர்க்கு உதவக் கூடாதா என்று நான் எண்ணியதுண்டு. இகழினிடையே, தம உலகின் குறுகிய நாட்டுப் பற்று, போர்க்காலக் காய்ச்சல்கள் ஆகியவற்றினிடையே போராடியது போல- சாவினுக்கு அஞ்சாது பகைமையும், பழியுணர்வுமின்றித் தம் வீர நகையால் உலகைத் தட்டி யெழுப்பியதுபோல - இன்றைய சூழ்நிலைகளிடையேயும் அவர் போராடலாம் அன்றோ?

நாடுகள், வகுப்பினங்களிடையே ஒப்புரவு, நேசம், உயர் நாகரிகம், கலை நயப்பண்பு, தனி மனிதன் வாழ்வில் பண்டை