(162
|––
அப்பாத்துரையம் - 8
கவரும் புத்துவமை, புதுவிளக்கம், புதுமுடிபுகளை அவர் வாதங்கள் போர்த்துக்கொண்டு வெளிவந்தன. வாத எதிர் வாதத்தில்கூட அவர் புதுமைச்சுவையும், நகைச்சுவையும் ஊட்டினார். அவர் வாதங்களின் நோக்கம் எதிரியை முறியடிப்பதோ, புண்படுத்து வதோ அன்று; அவர்களையும் தம் நகைத்திறத்தால், தம் ஆர்வத்தில் ஈடுபடுத்திவிடுவதேயாகும்.
ஷா எத்துறையிலும் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை நடத்தி யிருக்கக்கூடியவர். அரசியல்துறையில் அவர் என்ன செய்யக் கூடும் என்பதனை ஸென்ட் பாங்கிரஸ் வட்டத்திலும், ஃவேபியன் கழகத்தின் வாயிலாகத் தொழிற்கட்சி அமைப்பிலும் அவர் நன்கு காட்டியுள்ளார். ஃவேபியன் கழகக் குழு நடவடிக் கைகளிலும் மற்ற நடைமுறைகளிலும் அவர் பேச்சாளர், எழுத்தாளர், பணியாளர் ஆகிய எல்லாத் துறைகளிலும் தம் முழு நிறை உழைப்புப் பண்பையும் விடாமுயற்சியையும் துணிவையும் விளக்குகிறார். ஆனால், இத்துறைகள் அனைத்தையும் விடுத்து அவர் கலைத் துறையை நாடியது அதன் பெரும்பயன் கருதியே. அப் பயனை உலகமக்களாகிய நாம் அனைவரும் பெற்றுவரு கிறோம். பிற துறைகள் யாவும் இயங்கும் துறைகள், அல்லது இயக்கும் துறைகள். கலை இயக்குவோரை இயக்கும் துறை. ஷா இத்துறை மூலம் தேசகாலங் கடந்து உலகை என்றென்றும் இயக்கிவர வல்லவர் என்பதில் ஐயமில்லை. அவர் பண்புகளை மேற் கொண்ட இளைஞரும் மங்கையரும் பல்கிப் பெருகும் நாடு, உலக நாகரிகத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கும். தமிழகமும், தென்னாடும் அத்தகைய உணர்பண்புகள் தாங்கி, அவற்றின் வாயிலாக இந்திய மாநிலத்தை ஒரு புறமும், தென் கிழக்கு ஆசியாவை மறுபுறமும் இயக்கி மேல்திசை சார்ந் தொளிரும் அறிவுஞாயிற்றை மீண்டும் கீழ்த்திசைக்குக் கொண்டு வருமாக. படிஞாயிற்றின் ஒளியெடுத்து விரைவில் எழுஞாயிற்றின் புத்தொளி உலகிற்குப் புத்துணர்வூட்டுமாக.