டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
177
4-56 என்றான். சிறுவன் ‘அடி சக்கை' என்று மகிழ்ச்சியுடன் கூவிக்கொண்டு சென்றான். டாம் ஒன்றும் விளங்காமல் 4-56 என்றாயே, ‘அது என்ன' என்று கேட்டான்.
'அதுவா? அவன் ஒருகல் தொலை குதிரையுடன் ஒத்து எப்போதும் ஓடிவருவான். அவன் புறப்படும்போதும் நிற்கும் போதும் கடிகாரத்தைப் பார்த்து, ஒரு கல்லை எத்தனை கணங் களில் எத்தனை நொடிகளில் கடக்கிறான் என்று கூறுவேன். அவன் வேகத்தின் முன்னேற்றத்தை இது அவனுக்குக் காட்டும். இதற்கு முன்பெல்லாம் அவன் ஐந்து கணங்களுக்குள் கடந்த தில்லை. இன்று நான்கு நொடிகள் குறைந்துள்ளன' என்றான்.
ரக்பி மாணவர்களின் குறும்பில்கூட இத்தகைய போட்டித் திட்டம் இருப்பது கண்டு டாம் வியப்படைந்தான். ரக்பி பற்றிய அவன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
பன்னிரண்டடிக்கப் பத்துக் கணங்கள் இருக்கும்போது வண்டி ரக்பி நகர எல்லையடைந்தது. நகர்த் தெருக்களில் செல்லும்போது இருபுறமிருந்தும் பலகணிகளின் வழியாகச் சிறியவரும் பெரியவர்களும் வண்டியை ஒரு வேடிக்கைக் காட்சியாக வந்து பார்த்தனர். சிறுவர் சிறுமியர் தன்னைத் தனிப்பட ஆர்வத்துடன் கூர்ந்து நோக்குவதாகடாம் எண்ணினான். ஆனால் அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் குதிரைகள் அவனை இழுத்துக்கொண்டு வேகமாய் அப்பால் சென்றன.ஆர்வமுகங்கள் அடிக்கடி தோன்றித்தோன்றி மறைந்தன.
கணக்காகப் பன்னிரண்டு மணிக்கு ஒரு பெரிய இடமகன்ற மதிலகவாயில் தென்பட்டது. 'அதுதான் ரக்பி பள்ளி மா மனைவாயில்' என்றான் காவலாள்.
வண்டி சற்றே நின்றது. காவலாள் பெட்டி படுக்கையைக் கீழே எடுத்துப்போட்டான். டாம் இன்னது செய்வது என்று நினைப்பதற்குள் காவலாள் அவனைக் கைப்பிடித்திறக்கிவிட்டு, முதல் தடவையாக அவனைப் பெயரிட்டழைத்து "போய் வருகிறாயா, டாம். வரும்போது போகும்போது நீ இப்பக்கம் வந்து என்னைச் சந்தி. நான் வரட்டுமா?” என்றான்.
வலவன் குதிரைகள் மீது ஓங்கிய சாட்டையுடன், சிறுவன் இறங்கிவிட்டானா? என்றான்.