பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் எல்லாவற்றிற்கும் தலையாட்டினான். ஆனால் அவன் நடையில் புது வீறு புகுந்தது. அவன் தலையைச் சற்று நிமிர்ந்து கொண்டே நடந்தான்.

"உன் வகையில் நான் ஏன் அக்கரை காட்டுகிறேன், தெரியுமா? என் மாமன் உன் தந்தையின் நண்பர். அத்துடன் என் அத்தை உன்னை கவனிக்கும் படி எழுதினாள். ஆகவேதான் நான் இத்தனை முயற்சி எடுத்துக்கொள்கிறேன். மேலும் இந்த அரையாண்டுக்கு அத்தை எனக்கு அரைப் பொன் அளித்திருக் கிறாள். அவள் நல்லெண்ணத்தைப் பெருக்கினால், பெரும்பாலும் அடுத்த அரையாண்டில் அதை இரட்டிப்பாக்குவாள் என்றுகூட எண்ணுகிறேன்!'

ஈஸ்டின் நட்பில் நேர்மையும் அன்பும் இருந்தன. அத்துடன் தன்னலமும் கலந்திருந்தது. ஆனால் அவன் அதை மறைக்க வில்லை. அவன் தன்னிடம் நம்பமாக யாவும் கூறுவது கண்டு டாம் மகிழ்ந்தான்.

தொடக்கப்பள்ளி மாணவர்களைப் போல் பொதுவாகக் களங்கமற்ற விளையாட்டுத் தன்மையும், கிளர்ச்சியும், நேர்மையும் உடைய சிறுவரைக் காண முடியாது. இப்பருவத்துப் பையன்களுக்கு ஈஸ்ட் ஒரு நல்ல சான்றாயிருந்தான். அவன் நாத்துடிப்பும் படபடப்பும் கிளர்ச்சியும் ஊக்கமும் உடையவன். பள்ளி வாழ்வில் சிறுவருலகத்தில் பரவியிருந்த பல ரக்பி மரபுகள், கதைக் கட்டுமானங்கள், பழக்கவழக்க நம்பிக்கைகள் ஆகியவை முதல் அரையாண்டுக்குள்ளேயே அவனிடம் ஊறியிருந்தன. ஒரு சில மணி நேரத்துக்குள்ளாகவே அவற்றில் பெரும் பகுதியை அவன் டாமுக்கும் படியவைத்தான்.

ரக்பியிடம் இருவரும் கொண்ட பற்றும், அதனைப் பற்றி இருவரும் கொண்ட பொதுக்கருத்துக்களும் அவர்களை விரைவில் இணையறா நண்பரும் தோழரும் ஆக்கின. டாமுக்கும் தாய் தந்தை, தங்கையரைப் பிரிந்த துன்பத்தில் ஒரு பாதி தன் புதுவாழ்வின் ஆர்வத்தில் பறந்து போயிருந்தது. இப்போது மீதிப்பாதியிலும் பெரும் பகுதி மறைந்துவிட்டது. அவனுக்கு இயல்பாயிருந்த கூச்சமும் அடக்கமும் அமைந்த நடையும் அவன் புதிய கிளர்ச்சியில் மெல்ல மறைந்தன.