பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188) ||

அப்பாத்துரையம் – 8

அறையைத் திறந்துவைத்துக் கொண்டு படுக்கிறான். தட்டிக்கு அப்பால் யாராவது வந்தால், அவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். தூங்குகின்ற அவன் பாம்புச்செவி கேளாமல் மெல்ல வந்திருந்தால்கூட, எந்தக் கணத்தில் பதம்பார்த்து விடுவானோ என்ற அச்சம் இல்லாமல் ஓய்வாய் இருக்க முடியாது.'

ஆசிரியர் ஆட்சியைவிடப் பள்ளியின் குடியாட்சியில் சட்டாம் பிள்ளைகளின் ஆட்சிதான் மிகுதி என்றும், எந்த ஆசிரியர் ஆட்சியையும் விட அதுதான் சிலசமயம் கொடுமை மிக்கதாயிருந்தது என்று டாம் மெல்ல மெல்ள அறியலானான். குடியாட்சிக்குத் தகுதிபெறாத இடத்தில், குடியாட்சி கொடிய கொடுங்கோலாட்சியினும் பொறுக்க முடியாததாகி விடும் என்பதை இந்நிலை சுட்டிக்காட்டிற்று.

இப்போது மணி ஒன்றாயிற்று. உணவு மணி அடித்தது. உணவுக் கூடத்தில் இடம்பெற மாணவர்கள் அனைவரும் போட்டியிட்டுக் கொண்டு ஓடினர். ஈஸ்ட் முன்னோட, டாம் அவனை எட்டிப் பிடிக்கப் பின்னோடினான்.

முன்பின் என்று ஓடிவந்தாலும், மாணவர்கள் அவரவர்க்குக் குறிப்பிட்ட வரிசைப்படியே அமர்ந்தனர் என்பதை டாம் கவனித்தான்.டாம் முதல் அரையாண்டுப் பிரிவுக்குரிய சட்டாம் பிள்ளையருகில், எல்லாருக்கும் பின்னாலுள்ள இருக்கையில் அமர்விக்கப்பட்டான். உணவு மேடையிலே அவ்வப் பிரிவினரை அமரிக்கையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவே சட்டாம் பிள்ளை எல்லாருக்கும் பின்னிருந்தான் என்பது டாமுக்கு நாளடைவிலேயே தெரியவந்தது.

பிள்ளைகளில் சிலர் உணவுமேடைக்கு வரும்போது வியர்த்து விருவிருந்து வந்தனர். இவர்கள் உணவு நேரம் வரை பந்துக்களத்தில் ஓடியாடி, நேரே வந்தனர். வேறு சிலர் முகம் வெளிறிக் கண் பஞ்சடைத்தவர்களாக வந்தனர். இவர்கள் அந்நேரம்வரை அறைகளில் அடைபட்டுப் புத்தகக்களைத் துருவிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். மற்றும் சிலர் ஒருவருக்கொருவர் பேசிய வண்ணம் வந்தனர். அறைவாயில் கடந்த பின்னும் அவர்கள் பேச்சு முணு முணுப்பாகவும் குசுகுசுப்பாகவும் அடங்கி இரைச்சலுண்டாக்கிற்று. சட்டாம் பிள்ளையின் கடும் பார்வையே அதை முற்றிலும் அடக்கிற்று.