டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
203
'வெளியேறி' விட்டதனால், தலைவர் 'கையெறி' (Throw) நிகழ்ந்தது. இளைய புரூக் எதிர்த் தரப்பினர் பாதுகாப்பு வலுமிகக் குறைந்த இடம் பார்த்து நின்றுகொண்டிருந்தான். களத் தலைவர் என்ற முறையில் மூத்த புரூக் அவனை நோக்கிப் பந்தை வீசினார்.
இளைய புரூக் காலடிபட்டதே பந்து தன் செயலற்று அவன் காலின் செயல் வசப்பட்டது. பந்திலிருந்து காலை மிகுதி விலக்காமலே அவன் மீண்டும் அதை நெடுந்தொலை இயக்கிச் சென்றான். அது சென்ற திசை மனைவீரர் எதிர்பாராத திசையாதலால், நீண்ட நேரம் அதை யாரும் தடைசெய்ய முடியவில்லை. பள்ளி இல்ல மாணவர் பலர் புரூக்கைப் பின்பற்றி அவ்வெற்றியில் தாமும் பங்குபெற்றுழைக்க விரைந்தனர். ஏமாந்து வேறு வேறு திசைகளில் நின்ற மனை வீரரும் இழந்துவிட்ட வாய்ப்பை மீட்டும் பெற ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு வர முயன்றனர்.
ரக்பி பள்ளித் தலைவரின் மாடிவீடு களத்தின் ஒரு புறமே இருந்தது. களத்துக்கு அருகில் உள்ள தம் பலகணி திறந்து தலைவரும் தலைவர் மனைவியும் இக்காட்சியைக் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தனர்.
விரைந்து புரூக்கினால் பின்பற்றிச் செல்லப்பட்ட பந்து பள்ளி மனையின் கள அகலத்தில் பெரும்பகுதி கடந்துவிட்டது. இனி புரூக்கின் பேர்போன உதைகளில் ஒன்று வாய்ப்பாக உதைக்கப்பட்டால் போதும்; பந்து இலக்குக் கெலித்துவிடும். இவ்வச்சம் மனைமாணவரிடையே பரபரப்பை ஊட்டிற்று. 'இலக்கைப் பாருங்கள்; இலக்கைப் பாருங்கள்' என்று எல்லாரும் கூவிக்கொண்டே இலக்கு நோக்கி ஓடினர். பலர் புரூக்கின் பந்தையும் அவனையும் நெக்கித் தள்ளவும் முயன்றனர். நெருக்கடியில் ஒரு தடவை புரூக் விழுந்து விட்டதாகவே தோன்றிற்று.ஆட்டக்காரருள் எவரும் அஞ்சும் முரட்டு ஆட்டக்காரனாகிய புரூக் அவன்மீது மோதினான். ஆனால், அவன், தள்ளாடிச் சமாளித்துக்கொண்டு மீண்டும் பந்தைக் காலிற் பற்றிக்கொண்டான்.
இப்போது பந்துக்கும் பள்ளிமனைப்புற இலக்குக்கும் ஆறுமுழத் தொலைதான் இருக்கும். பள்ளியின் துணிகர ஆட்டக்காரர் பலர் ஆத்திரங்கொண்டு பந்தின் மீது பாய்ந்தனர்.