டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
209
சட்டாம்பிள்ளை உடலும், அதன் மீது தாக்கியவர் பலரும் வீழ்ந்தனர். விழுந்தவர் ஒவ்வொருவராக எழுந்தனர். சட்டாம் பிள்ளை இன்னும் எழுந்திருக்கவில்லை. டாமோ அவனடியில் கிடந்தான்.
ஆனால், அவர்கள் எழுவதற்குள் தலைவர் புரூக் பந்தை நாடி வந்தார். பந்தைக் காணவில்லை. சட்டாம்பிள்ளையை நோக்கி 'எழுந்திரு; பந்தை விடு' என்றார். அவன் எழுந்திருந்தான். தன்னிடமா பந்து இருக்கிறது என்று அவன் பார்த்தான். ஆனால், பந்து போல டாம் அவனடியில் கிடந்தான். அவனைப் புரட்டிய போது அவன் பிடியில் பந்து இருந்தது. டாம் என்ன ஆனான் என்பதையும் மறந்து இல்லத்தார். மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஏனென்றால், அதற்குள் ஆட்ட நேரம் முடிந்துவிட்டது. மனை, இலக்கு எடுக்காமலே தோற்றது. இல்லம் எடுத்த இலக்கு அதன் வெற்றியை உறுதிப்படுத்திற்று.
டாம் உடலில் உயிர் இருப்பதாகவே தோற்றவில்லை. அவனைச் சூழ இருதரப்பினரும் திரண்டனர். தலைவர் புரூக் அவனைத் தூக்கி எடுத்தார். "நண்பர்களே! எல்லாரும் விலகிக் காற்றுவர விடுங்கள். மூச்சு இருக்கிறதா பார்க்கலாம்,” என்கிறார். கூட்டம் விலகுகிறது.
"மூச்சு மெல்ல வருகிறது. எலும்பு எதுவும் முறியவில்லை. ஊமையடிதான்! ஆனால்...”
அவர் வாய்பேசி மூடுவதற்குள்
டாம் எழுந்து உட்கார்ந்தான். "ஆகா! எனக்கு ஒன்றுமில்லை. ஏன் சூழ்ந்து நிற்கிறீர்கள்? பந்து என்ன ஆயிற்று,” என்றான்.
தலைவர் புரூக் மகிழ்ச்சி பொங்க, “ஆகா! தரக்கேடில்லை. மிக வீரமான பையன்” என்று டாமைத் தட்டிக்கொடுத்து, அருகிலுள்ளவர்களிடம் 'யார் இந்தச் சிறுவன்?' என்றார்.
ஈஸ்ட்கூட்டத்தை நெக்கிக் கொண்டு "அதுதான் டாம். என் நண்பன். இன்றுதான் வந்து சேர்ந்த புது மாணவன்” என்று பெருமிதத்துடன் கூறினான்.