4. விருந்து
ஆட்டம் ஆடி முடிந்தது. பள்ளி இல்லத்தின் ஆர்வம் வான்முக டெட்டிற்று. அதைச் சிறிது நேரம் ஆர்ப்பரிப்பில் காட்டியபின் பிள்ளைகள் நாலு திசைகளிலும் மெள்ள மெள்ளக் கலைந்து சென்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலார் பள்ளிமாமனை அருகில் உள்ள ஸாலி ஹாரோ வெலின் (Sally Harrowell) அப்பக் கடைக்குச் சென்று மகிழ்ச்சி கொண்டாடினர்.
ஈஸ்டின் கால் வேதனை இன்னும் ஆறவில்லை. அவன் இன்னும் நொண்டிக் கொண்டுதான் நடக்க முடிந்தது. அந்த நிலையில் டாம் அவனைத் தாங்கிக் கொண்டு ஆட்டக் களத்திலிருந்து நடத்திச் சென்றான்.
வழியில் மூத்த புரூக் அவர்களைச் சந்தித்தார். அவர் அகமலர்ச்சியுடன் ஈஸ்டைத் தட்டிக்கொடுத்து, “இன்று நீ மிக நன்றாக ஆடினாய் தம்பி! உன் நோவு இப்போது எப்படி இருக்கிறது? ஏதும் பேரிடையூறில்லையே!” என்று கரிசனை காட்டிக்கேட்டார்.
“ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஒரு சிறு சுளுக்குத்தான்!” என்றான் ஈஸ்ட் அவன் பெற்ற பாராட்டினால் அவன் முகம் பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்தது.
“மிக நன்று! அடுத்த சனிக்கிழமைக்குள் உடலை நன்றாகத் தேற்றிக்கொள்” என்று புரூக் கூறிச் சென்றார்.
இங்கிலாந்திலுள்ள எல்லா மருத்துவ விடுதிகளின் மருந்துகளும் சேர்ந்தால்கூட ஈஸ்டின் உடலை அவ்வளவு சடுதியில் தேற்றியிருக்க முடியாது. புரூக்கின் சில சொற்கள் அவன் உளநிலை உடல் நிலை இரண்டிலும் அத்தனை பெரிய மாறுபாட்டைச் செய்தன. டாமோ, இதே பாராட்டில் ஒரு சிறு பகுதி பெறுவதற்குத் தன் காதுகளில் ஒன்றைக் கொடுக்க வேண்டி