டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
221
வெற்றி. அதில் நம் சிறந்த வீரர் பெருமைக்குரியவரானலும் அது அவர்கள் குறுகிய வெற்றியன்று; நம்முடன் சேர்ந்து அவர்கள் பெற்றுக்காட்டிய வெற்றி. அது தலைமையின் திறம் மட்டுமன்று; உங்கள் அனைவரின் ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றின் விளைவு. இதில் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கு அவர்கள் முயற்சி மட்டுமன்று; பிறர் திறமையில் ஒவ்வொருவரும் கொண்ட நம்பிக்கை. ஒருவருக்கொருவர் செய்த ஒத்துழைப்பு மட்டுமன்று; ஒருவருக்கொருவர் காட்டிய விட்டுக்கொடுப்பு. ஒரு சொல்லில் சொல்வதானால், நம் பள்ளியில்லத்தின் கட்டுப்பாட்டில் ஒரு தனிச் சிறப்புக்கூறு உண்டு. அது வெறும் முரட்டுக்கட்டுப் பாடன்று. அது ஓர் அன்புக்கட்டுப்பாடு. அது செங்கலின் வலுவை மட்டும் பொறுத்த வலுவன்று. செங்கலுடன் செங்கலைப் பிணைத்துச் செங்கல் உடைந்தாலும், செங்களின் பிணைப் பறாதபடி பிணைக்கும் சுண்ண நீற்றின் வலுவையும் பொறுத்த மதில் வலுவாகும். இவ்வன்புக் கட்டுப்பாட்டை, இக்கடமை உணர்ச்சியை, இவ்விட்டுக்கொடுப்பை, இப்பொதுநல ஆர்வத்தை, இந்த இன ஒற்றுமையுணர்ச்சியை நீங்கள் தளராது காக்க வேண்டும் வளர்க்க வேண்டும்."
“வெற்றியில் நம் அனைவரும் ஆர்வம் உண்டு; புகழில் நம் அனைவருக்கும் அவா உண்டு. பள்ளியின் புகழில் மட்டுமன்று; அதன் உறுப்பாகிய இல்லத்தின் புகழ்ப்பங்கிலும் நமக்கு ஆர்வம் உண்டு. இல்லத்தின் புகழில் மட்டுமன்று; அதில் நம் ஒவ்வொருவர் தனிப்பங்கிலும் தகுதியிலும் நமக்கு ஆர்வம் உண்டு. ஆனால், நம் ஆர்வம் அனைத்திலும் பிறருக்கும் பங்கு உண்டு. நாம் பெறும் புகழ் அனைத்திலும் அடுத்தவருக்கும் பங்கு உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இல்லத்தின் ஒரு மாணவன் புகழ் உச்சியடைந்துவிட்டால், ஆடிப்பாடுவது அவன் மட்டுமன்று. நம் அனைவருமே! இது ஏன்? நம் புகழ் இல்லத்தின் மற்றவர் புகழ், இல்லத்தின் மற்ற எவர் புகழும் நம் புகழே என்பதனால் அன்றோ? இது போலவே நம் இல்லப்புகழ் பள்ளிமனை உள்ளடங்கலாக ரக்பிப் பள்ளி முழுமைக்கும், இங்கிலாந்து நாட்டுக்குமே புகழ் அன்றோ? 'ரக்பி’ பள்ளி மாணவன் என்றால் இங்கிலாந்து முழுவதும் தோளுயர்த்திப் பெருமை அடைகிறதே! அது இதனாலன்றோ? நம் களத்தில், நம் வகுப்பில் நாம் மகிழ்ச்சியினால் செய்யும் ஆரவாரம்