5. தலைவர் ஆர்னால்டு
டாம் பிரௌண் ரக்பியில் சேர்ந்த போது அப்பள்ளியில் தலைவர் அல்லது தலைமையாசிரியராயிருந்தவர் அறிஞர் ஆர்னால்டு. அறிவு, கண்டிப்பு, அன்பு ஆகிய மூன்று பண்புகளிலும் அவரிடம் மேம்பட்ட பண்பு எது என்று கூறமுடியாது. அவற்றுள் மூன்றும் சரிசமமாகவே அவரிடம் குடிகொண்டிருந்தன எனலாம். ஆயினும் அவரைக் காண்பவர் கண்களுக்கு அவர்கள் மனப்பாங்குக்கு இசைய மூன்று பண்புகளுள் ஏதேனும் ஒரு பண்பு அல்லது இரண்டு பண்பு முனைப்பாகத் தெரிந்தன. மற்றப் பண்பு அல்லது பண்புகள் அவரிடம் இல்லையோ என்று அவர் பண்பு நிறைவைக் காணாதவர் நினைத்தனர். எனினும் நாளடைவில் தெரிந்தும் தெரியாமலும் அவரது முப்பண்பின் சரிசம அமைதி பலரையும் ஆட்கொண்டுவிட்டது. பேட்டர் புரூக் பேசியதிலிருந்து அவர் அவரது பண்பமைதியை ஓரளவு முழுவடிவில் அறிந்திருந்தார் என்றே தோன்றிற்று. ஆனால் மாணவரில் பெரும்பாலார் அவரிடம் கண்டிப்பு என்ற ஒரு பண்பையே காணமுடிந்தது. அவர்கள் அவரைக் கண்டு அஞ்சினராயினும் அவ்வச்சம் மதிப்புடன் வெறுப்பையும் உள்ளூர உண்டுபண்ணாமலிருக்க முடியவில்லை.
பேட்டர் புரூக் மற்றொரு சமயம் அறிஞரைப் பற்றிப் பேசநேர்ந்த போது, விருந்து வேளையில் கூறிய அறிவுரைக்கு மேலும் விளக்கம் தந்தார்:
"அறிஞர் ரக்பியின் தலைமையேற்றுச் சில பல நாட்களாய்விட்டன. இதற்குள் ரக்பியின் பழைய மாணவருட் பலர் அவரைப் படிப்படியாக அறிந்து கொண்டுதான் வருகின்றனர். 'ஒழிக அறிஞர் புத்தாட்சி முறை' என்று கூவுவது இன்னும் எளிதாயிருக்கலாம், அதுவும் நம் குடியாட்சி