அப்பாத்துரையம் – 8
242 || பிள்ளைகள் தட்டிப்பறித்துக்கொண்டு போகப் பார்ப்பர். ஐந்தாம்படிவ மாணவர் ஒரு புறமும், ஃவிளாஷ்மன் போன்ற அட்டூழியக்காரர் ஒரு புறமும் அதைத் தட்டிப்பறிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவர்.
டாம் இருந்த அறையின் மேலாள், மற்றவர்களைப் பார்க்க, முன்கோபமில்லாதவன். பிள்ளைகளை இரவெல்லாம் தூங்கவிடாது கடுமையாக நடத்தும் வழக்கமும் அவனிடம் கிடையாது. ஆயினும் அவனிடமும் கண்டிப்பு உண்டு. குற்றேவேல் முறையில் தவறினால், அல்லது பிள்ளைகள் அவன் அமைதிக்குக்கேடு ஏற்படும் வகையில் பேசினால், அவன் பொறுக்கமாட்டான்.
இன்று காலையில் அவன் எழுந்து திரையைப் பாதி நீக்கி வைத்துக்கொண்டு, தணப்பு அடுப்பின் வெதுவெதுப்பில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். டாம் பார்வையில் அவன் ரக்பி இல்லத்தின் அச்சிறு பகுதிக்கு ஒரு சிறு அரசனாகவே தோன்றினான். அதற்கேற்பப் பின்புறம் ஏதோ அரவங் கேட்டு அவன் திரும்பினான். பின்னால் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவர், உடனே சண்டையை நிறுத்தி அமைந்து இருந்தனர். மேலாள் கண் வேறு திசையில் திரும்பியதே அவர்கள் மீண்டும் சண்டையிடத் தொடங்கினர். ஆனால், இரு சாராரும் அதன்பின் உரத்துமட்டும் பேசவில்லை. மௌனச் சண்டையே இட்டனர்.
ச்சண்டைக்குக் காரணமாயிருந்தவர்கள் கிரீன், ஹால் என்ற இரு சிறுவர்கள். ஹாலின் தலை பெரிதாயும் கால்கள் மெலிந்து குறுகியும் இருந்ததால், அவனை எல்லோரும் தவளைக்குஞ்சு என்று அழைத்தனர். இருவரும் மேலாளிட மிருந்து தொலைவில் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தனராதலால் ஒருவருடன் ஒருவர் ஓயாது குறும்பு செய்து கொண்டே இருந்தனர். மற்றப் பிள்ளைகளும் அவர்களை அடிக்கடி சண்டைமூட்டி வேடிக்கை காட்டினர். இன்று அவர்கள் சண்டை படிப்படியாக வளர்ந்தது. அச்சமயத்தில் மேலாளின் கண்கள் அப்பக்கம் திரும்பியிராவிட்டால், அவர்களிருவரும் அடிதடியில் இறங்கியே இருப்பார்கள்.