டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
247
பரவெளியிலிருப்பதாக அறிவிக்கப்படும் ஆண்டவனை அவர் மக்கள் அகவெளியில், மாணவர் நாள் முறை வாழ்க்கையில், அவர்கள் பொது இன்ப துன்பங்களில் ஈடுபட்ட ஒன்றாகக் காட்டினார்.
"நேர்மையின் மன்னன் அவர்; ஆனால் அவர் அன்புக்கு உருகுபவர். புகழின் கொடுமுடி அவர்; ஆனால் இகழில் அல்லற்படுபவர்க்கு அவர் கை கொடுக்கும் நண்பன். நல்லன நாடித் தேடும் நல்லொளி அவர்; ஆனால் புல்லார் புன்மையகற்ற, தீயார் தீமைநீக்க விதிர் விதிர்க்கும் கனிவருள் பூண்டவர்” என அவர் கடவுளின் அன்புருவிலும் செயற்பண்புகளிலும் ஈடுபட்டுத் தாமே அகங்குழைந்தார்.
பிறருக்கு அவர் கூறவில்லை. தாமே தமக்குக் கூறிப் பிறரைக் கேட்கவைத்தார். மனிதர் முன்னிலையில் மனிதராக அவர் பேசவில்லை. மனித உள்ளந்தொட்ட மன்னவன் முன்னிலையில் நிற்கும் மனித உள்ளம் படைத்த மனிதனாகவே அவர் காட்சியளித்தார்.
அத்தெய்வீக ஒளி மின்னாற்றலெனக் கூட மெங்கும்
பரந்தது.
அடுக்கடுக்காக, வரிசைவரிசையாக, அவர் முன்னே அன்றலர்ந்து விரிந்த செந்தாமரையின் இதழ்கள்போல இளமுகங்கள் முகையவிழிந்து தம் உள்ளத் தடத்தின் இன்தேன் கசிந்துநின்றன. தாமரையின் பொகுட்டில் அமர்ந்த செய்யாளாக அவர் நின்று தம் புகழ் ஒளிக் கரங்களால் அவர்கள் உள்ளந் தடவினார். முறுக்கேறிய யாழின் நரம்புகள்போல மாணவர்ச் சிறுவர் நாடி நரம்புகள் அதிர்ந்தன. அவர் சொற்கள் அவற்றிடையே மெல்லென உலவி நல்லெண்ணங்களாகிய இனிய பண்ணிசைகளை எழுப்பின.
புதிதாக வந்த மாணவர் பேரவாக்களை அது தட்டி எழுப்பிற்று. பழைய மாணவர்கள் உள்ளத்தில் சென்ற காலக் குறைகள் மீது அது கருத்தைச் செலுத்திப் புதிய சீர்திருத்த அவா வூட்டிற்று. பள்ளியினின்றும் விலக இருந்த முதிர் மாணவர் களுள்ளத்தில் அது பள்ளியின் புகழாகிய தேறல் நிறைத்து, உலகத்தொண்டு, நாட்டுத்தொண்டு, கடவுள் தொண்டு ஆகியவற்றில் வேட்கை கொள்ளச் செய்தது.