(254
||--
அப்பாத்துரையம் – 8
ஹால் சேற்றிலழுந்தியும் கைகால் சோர்ந்தும் ஆட்டத்தில் பின்னிடைய நேர்ந்தது.டாமும் ஈஸ்டும் அவனை விட்டுச் செல்ல மனமில்லாமல், ஆதரித்திழுத்துச் சென்றமையால், ஆட்டத்திலும் இலக்கு எட்ட முடியவில்லை, திரும்பிவரவும் நேரமாயிற்று. ஈஸ்ட் இதைப்பற்றிக் கவலைப் பட்டான். “போகுமுன் கதவடைத்து விடுவார்களே! என் செய்வது?” என்றான்.
‘கதவடைத்து விட்டால் என்ன குடி முழுகிப் போய் விடும்?' என்றான் டாம்.
“ஏன்? இரவு தேநீர் சிற்றுண்டி தரப்படாமலே தலைவர் மாளிகைக்கு இட்டுச் செல்லப்படுவோம். இது போதாதா” என்று பொருமினான்.
ஆனால் படபடத்துப் பயனில்லை. அவர்கள் ரக்பி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே கதவடைப்பு நேரம் கழிந்துவிட்டது. அதன்பின் கூட ரக்பி சென்று சேர முடியுமா என்ற ஐயம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஹாலுக்கு நடக்க முடியவில்லை. டாம் அவனை இழுத்துக் கொண்டும் சுமந்து கொண்டும் வந்ததால் பின்னும் முடைப்பட்டான். இந்நிலையில் ஆக்ஃஃவோர்டு செல்லும் வண்டி ஒன்று அவ்வழியே வந்தது. வண்டியைப் போகவிட்டு அவர்கள் பின்னால் தொத்திக்கொள்ள முயன்றனர். ஆனால், காலக்கேடாக, ஈஸ்ட் வண்டியிலேறும் போது சறுக்கி விழுந்து காலில் காயமுற்றான். அதன்பின் டாம் வண்டிக்காரனையே கெஞ்சி அழைத்து, ஒரு வெள்ளி தருவதாகக் கூறி அவன் நண்பர்களையும் ஏற்றித் தானும் ஏறிக்கொண்டான்.
ரக்பி பள்ளிவாயில் அடைத்து முக்கால் மணிக்கு மேலாகிவிட்டது. தலைவர் இல்லத்தின் தோட்டக் கதவு வழியாகவே அவர்கள் செல்ல வேண்டி வந்தது. அவர்கள் உடலும் முகமும் ஆடையும் எல்லாம் சேறுபடிந்து அழுக்கா யிருந்தன. அவர்கள் நேரங்கழித்து வந்ததனால் ஏற்படும் தண்டனைக்கு இரட்டிப்பு இதனால் அஞ்ச நேர்ந்தது. ஆகவே அவர்கள் யார் கண்ணிலும் படாமல் அறைகளுக்கு ஒளிந்தோட எண்ணினர். எனினும் அங்கே காவலிருந்த தலைவரின் தோட்டக்காரன் கண்களுக்கு அவர்கள் தப்பமுடியவில்லை. அவன் அவர்களைத் தலைவர் அறைக்கு இட்டுச் செல்ல முனைந்தான். அவர்கள் எத்தனை கெஞ்சியும் அவன் விடவில்லை.