டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
255
உடன் துப்புரவு செய்த பின்னாவது அனுப்பும்படி கேட்டும் பயனில்லை.டாமின் முகம் முழுதும் ஒரே சேறாயிருந்தது. அவன் தன் ஆடையால் அதைத் துடைக்க முயன்றான். ஆனால், ஆடை ஈரமாயிருந்ததால், ஆடையில் சேறு மிகுதியாயிற்றே தவிர, முகத்தில் அது குறையவில்லை.
அறிஞர் ஆர்னால்டு இருந்தஅறை நூலக அறை உள்ளே விளக்கு எரிந்தது. அவர் படித்துக்கொண்டு தான் இருப்பார் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் உள்ளேயிருந்து பாட்டோசைக் கேட்டது. அவர்கள் யாரும் முதலில் சென்று தட்ட விரும்பவில்லை. இறுதியில் டாமே துணிந்து சென்று தளர்ந்த தட்டாகத் தட்டினான். உள்ளே பாடிய பாட்டோசையால், யாரும் அதைக் கேட்கவில்லை. ஆனால் இரண்டாவது தட்டுடன் உள்ளேயிருந்து அறிஞர் 'யார் அது? உள்ளே வரலாம்'என்றார்.
படபடக்கும் கையுடன் கைப்பிடியைத் திருகிக் கொண்டு டாம் உள்ளே சென்றான்.மற்ற இருவரும் நடுங்கும் கால்களுடன் அடுத்துப் பின்னே பதுங்கிச் சென்றனர். அறிஞர் அவர்கள் எதிர்பார்த்தபடி படித்துக்கொண்டிருக்கவில்லை. மாணவர் நீந்து தற்போட்டிக்கான படகு ஒன்றை அவர் தம் கையாலேயே செதுக்கிக் கொண்டிருந்தார். அவர் கையில் சீவும் உளி ஒன்றும் சிறு சுத்தி ஒன்றும் இருந்தன. அவர் வேலை செய்யும் போதே முன்னாலிருந்த மூன்று பிள்ளைகள் தங்கள் பாட்டுத் திறமையை அவரிடம் காட்டிக் கொண்டிருந்தனர்.
அவர் செய்யும் வேலை இவை மட்டுமல்ல என்பதை அந்த அறையினுள்ளே பிள்ளைகள் கண்ட காட்சிகள் தெள்ளத் தெளிய அறிவித்தன. மேசையில் ஒருபுறம் அவர் திருத்திவைத்த ஆறாம்படிவ மாணவர் வீட்டுப் பாடப் புத்தகங்கள் கிடந்தன. திருத்த வேண்டியவை கட்டுக்கட்டாக மறுபுறம் அடுக்கயிருந்தன. மேசையின் கீழே அவர் ஏழை மாணவருக்காகத் தம் சிறு தையல் பொறியால் தைத்த ஆடைகள் கிடந்தன. ஒரு கோக்காலி மீது பாதி தைத்துவிட்ட ஆடையுடன் தையற் பொறி இருந்தது. மாணவருக்காக அவர் தீட்டிய தொடக்க வகுப்பின் விளக்கப் படங்கள் மற்றொருபுறம் சுவரில் முடிந்தும் முடியாமலும் தொங்கின.