(256)||
அப்பாத்துரையம் - 8
இக்காட்சிகள் அனைத்தையும் அங்குள்ள ஒரே விளக்கும் அறைமூலையில் செந்தீயுடன் எரிந்த தணப்படுப்பும் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டின. ஆனால், அதே ஒளி டாம், ஈஸ்ட், ஹால் ஆகியவர்கள் முகமிருக்குமிடத்தில் இருந்த சேற்றையும் அவர்கள் அழுக்குப் படிந்து தொப்பென்று நனைந்த ஆடையையும் காட்டின. அவர்கள் இந்நிலையில் 'என்ன தண்டனைக்கு ஆளாவோமோ!' என்று அஞ்சி நடுநடுங்கினர்.
ஆனால் அறிஞர் முகத்தில் கடுமைஇல்லை. இரக்கமே மிகுந்திருந்தது. மாணவர் முகத்தில் கண்ட அச்சமும் கிலியும் அவர் உள்ளத்தை இளக்கியிருந்தது. அவர்கள் பிந்திவிட்டதன் காரணத்தை அவர் உசாவினார், பொறுமையுடன் அதைக் கேட்டபின் ஈஸ்டிடம் உனக்குக் காயம் மிகுதி ஏற்பட வில்லையே!” நோவு எப்படி இருக்கிறது? என்று தந்தையைவிடக் கனிவாகக் கேட்டார். பின்பு, "விரைவில் சென்று உடைமாற்றி உடம்பை அலம்பிக்கொண்டு வாருங்கள்,” என்றார்.
66
அவர்களுக்கு மீண்டும் கிலி எழுந்தது. ‘ஆகா, புறத்தே அமைதி; அகத்தே புயல்தான். இனித்தான் இருக்கிறது தண்டனை!' என்று நினைத்தார்கள்.
ஆனால், அவர் தம் வீட்டு வேலைக்காரியை அழைத்து அவர்களுக்குத் தேநீரும் சிறிது அப்பமும் வழங்கச் செய்தார். பின் அவர்களை அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில், "பெரிய பிள்கைளின் இந்தத் துணிகர விளையாட்டில் நீங்கள் ஏன் கலக்கிறீர்கள்? நீங்கள் மிகச் சிறுபிள்ளைகளாயிற்றே! இனிப் போகமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். போனால் இன்று உங்களுக்குத் தரப்பட்ட சலுகையும் தரப்படாது. இரவில் பட்டினிதான் கிடக்க நேரும்" என்றார்.
வழக்கமான அடியை எதிர்பார்த்து அது கிடைக்காதது பற்றி ஈஸ்ட் மகிழ்ந்தான்.
அடிக்குக்கூட ஹால் அவ்வளவு அஞ்சவில்லை. குறைந்தது இருபது வரிகளாவது தண்ட எழுத்து எழுதவேண்டி வரும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். அதிலிருந்து தப்பியதுபற்றி அவனுக்கு மகிழ்ச்சி. அத்துடன் பள்ளி இல்லத்தில் கிடைக்காத நல்லுணவும் இரட்டிப்பு உணவும் கிடைத்தது ஓர் அரும் பேறு என்று மகிழ்ந்தான்.