அறிவுலக மேதை பெர்னாட்சா
7
பழையகுருட்டு நம்பிக்கைகளைப் போலவே, ஆராயாப் புதியகுருட்டு நம்பிக்கைகளும் உண்டு என்றும் அறிஞர் ஷா விளக்கினார். அவர் செயல் பழமையில் புதுமை யூட்டியசெயல் மட்டுமன்று, புதுமையில் புதுமை யூட்டிய செயலும் ஆகும். அடிமை நாடுகளில் அடிமைத்தனத்தை நீக்கப் பாடுபடுபவர் பலர். நாட்டு மக்கள் உள்ளத்தில் தோய்ந்த அடிமைப் பண்பு களைப் போக்கச் செயலாற்றும் அறிவுவிடுதலை வீரர் பலர். ஆனால், அடிமை நாடுகளின் மக்கள் அடிமைப் பண்புக்கு ஆட்பட்டிருப்பது போலவே, ஆதிக்க நாடுகளின் மக்களும் ஆதிக்கப் பண்புக்கு அடிமைப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டியவர் ஷா. அடிமை நாட்டின் ஏழை மக்கள் அடிமைத் தனத்தை வேண்டா வெறுப்பாகவே மேற்கொள்வர். ஆதிக்க நாட்டின் ஏழை மக்களோ, ஆதிக்கக் குழுவினரின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பதுடன், ஆதிக்கப் பண்பு என்ற அம்மயக்க வெறி காரணமாக அதே அடிமைப் பண்பை அரவணைத்து மகிழ்வர். மெலியாரை வாட்டி மகிழும் வலியாருக்கு ஷா தந்த விளக்க எச்சரிக்கைகள் இவை!
பெர்னார்டுஷா வாழ்ந்த நாடு பிரிட்டன். அது பாதி உலகளாவிய பேரரசின் தலைமை பூண்ட நாடு. அவர் வாழ்க்கை தொடங்கிய காலமோ விக்டோரியா ஆட்சிக் காலம்.
66
ஆளுக, ஆளுக! பிரிட்டா னியா!
அலைகடல் ஆளுக, பிரிட்டானியா!!”
என்று வெற்றி வீறாப்புடன் பிரிட்டானியர் பாடிய காலம் அது. ஆனால், அதே பாட்டின் அடுத்த அடிகளில் அவர்கள் தொடர்ந்து,
66
"ஆளுக, ஆளுக! பிரிட்டானியா!
அலைகடல் ஆளுக பிரிட்டானியா!!
பிரிட்டானியர் என்றும்,
அடிமைகள் ஆகமாட்டார்!!!”
என்று பாடினர். இந் நாட்டுப் பாடலின் முதலிரண்டு அடி களிலும், பின் இரண்டு அடிகளிலும் உள்ளீடாகக் காணப்படும் முரண்பாட்டைக் கண்டு பெருநகை நகைத்த பெரியார் அவர்.