பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மீட்சியும் தேர்ச்சியும்

டாமின் முதல் தவறுதலின் போது ஆர்னால்டு அவனிடம் உளக்கனிவு காட்டியதுடன், அவன் தோழர்களிடமும் கனிவு காட்டியிருந்தார். அத்துடன் அவன் திருந்தாமல் மேன்மேலும் கெட்டு, ஆசிரியரிடம் அவப்பெயர் வாங்கியபோதுகூட, அவன் போக்கைக் கவனித்துத் திருத்துவதற்கான வாய்ப்புக்கே காத்திருந்தார். பள்ளி முழுவதுமே நல்ல தலைவர்கள் அகன்று, புதுத்தலைவர்கள் அருமையாய் போனபோதும், அவர் அவனையே புதிய வாழ்வுக்குரிய நடுமையமாகக் கருதி உன்னிப் பாகக் கவனித்து வந்தார். ஆயினும் இரண்டாம் தடவை சறுக்கிய போது அவனிடம் சற்றுக் கண்டிப்புக் காட்டாமல் அவரால் இருக்க முடியவில்லை. கண்டிப்பினாலாவது அவன் போக்கு எளிதில் மாறலாம் என்று அவர் எண்ணியிருக்க வேண்டும்.

ரக்பி பள்ளியில் ஒரு பக்கமாக அவன் ஆறு ஓடிற்று. அவ்விடத்தில் ஆறு வளைந்தும் சிறிது சேறார்ந்தும் ஓடியதால், அதில் மீன்கள் மிகுதி. ரக்பி மாணவர் அடிக்கடி அதில் மீன் பிடிப்பது வழக்கம். யாராவது அவர்களைக் கண்டித்தால் பள்ளியின் பக்கமாக அவ்வாற்றில் மீன் பிடிக்கும் உரிமை தங்களுக்குத்தான்

உண்டு என்று வீம்பு பேசுவர்.

எதிர்கரையிலுள்ள ஒரு தோட்டத்தின் வேலையாள் அவர்கள் உரிமையை மறுத்தான், "பள்ளி இருப்பது ஒரு கரையில், அதில் வேண்டுமானால் உங்கள் உரிமை செல்லலாம். மற்றக் கரை எங்கள் தோட்ட முதல்வருக்குரியது. அங்கே நீங்கள் மீன்பிடிக்க நான் விடமாட்டேன்,” என்றான்.

தோட்டக்காரன் புதியவன்; முரடன் ஆயினும் அவன் நாட்டுப்புறத்தானாகவும் கிழவனாகவும் இருந்ததால், சிறுவர்கள் அவனை மதியாமல் பேசினர். டாம் எல்லாரையும்விட உரத்த குரலில் நையாண்டியாகவும் அவமதிப்பாகவும் பேசினான்.